ஆயன் பெனடிக்ட் புதிய ஒலிப்பதிவுத் தொடர்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மறைந்த முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் தனது தலைமைத்துவப் பணியைத் துறந்த நாளான பிப்ரவரி 11 ஆம் நாளை முன்னிட்டு அவரது நேர்காணல்கள், ஒலிபதிவுகள் அடங்கிய மூன்று பிரிவுகள், வத்திக்கான் இணையதளத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் கூடியிருந்த கர்தினால்கள் முன், தனது தலைமைத்துவப் பொறுப்பை துறக்கும் முடிவை இலத்தீன் மொழியில் எடுத்துரைத்த மறைந்த முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்கள் பதவியைத் துறந்த 10 ஆண்டுகள் நினைவாக "Il pastore Benedetto" அதாவது ஆயர் பெனடிக்ட் என்னும் புதிய ஒலிப்பதிவுத்தொடர் வத்திக்கான் வானொலியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இறையியலாளர், பணிவான அருள்பணியாளர், மற்றும் அன்பான மனிதரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தனது பணித்துறவின் வழியாகத் திருஅவையின் வரலாற்றை மாற்றியமைத்தவர். திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாக திருஅவையை நன்கு வழிநடத்தியவர். இத்தகைய முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள், தனது தலைமைத்துவப் பணியை உள்மனச் சுதந்திரத்துடன் துறந்த தருணங்களை மீட்டெடுக்கவும், நேர்காணல்கள் மற்றும் பங்களிப்புகள் வழியாக முன்னாள் திருத்தந்தையாக இப்பத்தாண்டுகளில் அவர் ஆற்றிய பணிகளையும் இவ்வொலிப்பதிவு எடுத்துரைக்கின்றது.
திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் இறுதி நேரங்களில் உடன் இருந்த அவரது செயலர், கர்தினால் Georg Gänswein, திருத்தந்தையின் வாழ்க்கையை வரலாற்றுக் குறிப்பாக எடுத்துரைத்த Ansa பத்திரிக்கையாளர் Giovanna Chirri, மற்றும் Elio Guerriero, ஆகியோரின் குறிப்புக்களும், அவர் பணித்துறப்புப் பற்றி அறிவித்த நாளன்று கர்தினால்களுக்கு ஆன்மிகப்பயிற்சிக் கருத்துரைகளை வழங்கிய கர்தினால் Gianfranco Ravasi அவர்களின் கருத்துக்களும் இவ்வொலிப்பதிவில் இடம்பெற்றுள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்