புனித பேதுரு திருஉருவச்சிலை புனித பேதுரு திருஉருவச்சிலை  (credits Mallio Falcioni)

புனித பேதுருவின் தலைமைப்பீடத் திருவிழா

சாம்பல் புதன் வழிபாடு காரணமாக பிப்ரவரி 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு திருத்தூதர் பேதுருவின் தலைமைப்பீடத் திருவிழாவானது, சிறப்பிக்கப்பட உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி புதன் கிழமை சிறப்பிக்கப்பட இருக்கும் திருத்தூதர் பேதுருவின் தலைமைப்பீடத் திருவிழாவானது, சாம்பல் புதன் வழிபாடு காரணமாக பிப்ரவரி 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமைக் கொண்டாடப்பட இருக்கின்றது.

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் இவ்விழாவானது சாம்பல் புதன் வழிபாடு காரணமாக முந்தின நாளாகிய பிப்ரவரி 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சிறப்பிக்கப்பட உள்ளது.   

பெர்னினியின் புகழ்பெற்ற வெண்கலத்தாலான புனித பேதுரு திருஉருவச் சிலையானது சிறப்பு ஆடையால் அலங்கரிக்கப்பட்டும், எண்ணற்ற மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு சிறப்பிக்கப்பட்டும் கொண்டாடப்படும் இவ்விழாவானது பேராயர் கர்தினால் Mauro Gambetti அவர்களின் தலைமையில் சிறப்புத் திருப்பலியுடன்  கொண்டாடப்பட உள்ளது.

பழங்கால பாரம்பரியத்தைப் பின்பற்றி, பெருங்கோவில் மற்றும் அதன் கலைப் பணிகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பானவர்களான, “Sanpietrini,” என்று அழைக்கப்படுபவர்கள், திருத்தூதர் பேதுருவின் திருஉருவச்சிலைக்கு ஆடைகளை அணிவித்து அலங்கரித்தும், நூறு மெழுகுவர்த்திகளை ஏற்றியும் சிறப்பிக்க உள்ளார்கள்.

மேலும், 2022 ஆம் ஆண்டு போலவே, பிப்ரவரி 21 முதல், வத்திக்கான் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள இத்தாலிய கலைஞரான Gaetano Previati அவர்களின் ஓவியங்கள் தவக்காலத்தின் போது புனித பேதுரு பெருங்கோவிலில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. சிலுவைப் பாதையின் 14 நிலைகளைக் குறிக்கும் இந்த ஓவியங்கள் அதன் ஈர்க்கும் சக்தி, பரிமாணம் மற்றும் வண்ணங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், சிலுவை பாதையின் மறைபொருளை  விவரிக்கும் ஓவியத்தின் சிறப்புக்கள், தவக்காலத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இறைமக்களுக்கு விளக்கப்பட உள்ளது. சிலுவைப்பாதையின் நிலைகளைத் தியானிக்க இறைமக்களை ஊக்குவிக்கும் ஒரு "பக்திமிகு" கண்காட்சியாக இருக்கும் என்றும் உயிர்ப்புப் பெருவிழாவிற்கு நம்மைத் தயாரிக்க இந்த ஓவியங்கள் மிகவும் உதவும் என்றும் கருதப்படுகின்றது.

இவ்வாண்டு தவக்காலத்தின் முதல் சிலுவைப்பாதை கர்தினால் Mauro Gambetti அவர்கள், தலைமையில் பிப்ரவரி 24ஆம் தேதி உரோம் உள்ளூர் நேரம் மாலை 4.00 மணிக்கு புனித பேதுரு பெருங்கோவிலில் நடைபெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2023, 15:09