கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின் 

நீதியின் கனியாகவும், பிறரன்பின் விளைவாகவும் கிட்டுவது அமைதி

முரண்பாடுகளுக்கு கலந்துரையாடல்கள், மற்றவர்கள் மீதான மதிப்பு போன்றவைகள் வழியாக அமைதியான முறையில் தீர்வுகாணமுடியும் : கர்தினால் பரோலின்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் செக்கொஸ்லோவாக்கியா நாடு இரு தனி நாடுகளாக அமைதியில் பிரிந்து சென்றது இன்றைய பிரிவினை மோதல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி எவ்வித மோதலும் இன்றி அமைதியில் செக் மற்றும் ஸ்லோவாக் நாடுகள் உருவாகியதன் 30ஆம் ஆண்டு நிறைவையொட்டி, உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் அந்நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளுடன் ஏப்ரல் 17, திங்கள் மாலையில் திருப்பலி நிறைவேற்றி சிறப்பித்த கர்தினால் பரோலின் அவர்கள், முரண்பாடுகளுக்குக் கலந்துரையாடல்கள், மற்றவர்கள் மீதான மதிப்பு போன்றவைகள் வழியாக அமைதியான முறையில் தீர்வுகாண முடியும் என்பதற்கு இந்நாடுகளின் உதயம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.

மோதல்கள் இல்லாதிருக்கும் சூழல்களில் கட்டப்படுவதல்ல இறைவனின் அமைதி, மாறாக, நீதி மற்றும் இணக்கத்தின் முன்னிலையில் கட்டப்படுவதே அது என்பதையும் வலியுறுத்திக் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

நீடித்த நிலைத்த அமைதி உலகில் நிலவுவதற்கு ஒருமைப்பாட்டுணர்வும், ஒருவர் ஒருவர் மீதான மதிப்பும் இன்றியமையாதவை என்பதையும் வலியுறுத்திய திருப்பீடச் செயலர்,  அமைதி என்பது நீதியின் கனியாகவும், பிறரன்பின் விளைவாகவும் கிட்டுகிறது என மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 April 2023, 14:07