இறையியல் வளர்ச்சி நற்செய்திப்பணிக்கான வளர்ச்சி
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறையியலாளர்களுக்கு இடையேயான உரையாடல், அறிவியல் மற்றும் சமூகத்துடனான உரையாடல் ஆகியவற்றால் இறையியல் ஆழமாக வளரும் என்றும், அது எப்போதும் நற்செய்திப் பணிக்கான வளர்ச்சியாக மட்டுமே இருக்கும் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் Víctor Manuel Fernández.
ஜூலை 1 சனிக்கிழமை விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறையின் தலைவராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்ட பேராயர் Víctor Manuel Fernández அவர்கள் திருப்பீட செய்திப் பிரிவு இயக்குனர் முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இவ்வாறு கூறினார்.
அர்ஜென்டீனாவின் லா பிளாட்டா பேராயரான விக்டர் மானுவல் ஃபெர்னாண்டஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் பணியில் பொறுப்பேற்க உள்ள நிலையில் இறையியல் பார்வையில் தனது பணியை செய்வதே திருத்தந்தை பிரான்சிஸ் தன்னிடம் ஒப்படைத்த பணி என்று தான் நம்புவதாகவும், அவரது கடிதம் தனக்கு வலியுறுத்துவதும் அதுவே என்றும் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Buenos Airesல் பேராயராக இருந்த போதே அவருக்கு மிக நெருங்கிய உடன்பணியாளராக இருந்த பேராயர் பெர்னான்டஸ் அவர்கள், நம்மை அன்பு செய்து மீட்கும் உயிருள்ள கிறிஸ்துவின் அனுபவம் இல்லாமல், நாம் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது என்ற திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களின் வரிகளையும் நினைவுகூர்ந்தார்.
கிறிஸ்து அனுபவம் இல்லாமல் அனைவருடனும் வாதாடுவதில் கவனம் செலுத்துதல் மற்றும் விவாதித்தல், மக்களிடையே எந்தவிதமான வளர்ச்சியையும் கொண்டுவர உதவாது என்று கூறிய பேராயர் பெர்னாண்டஸ் அவர்கள், கிறிஸ்தவராக இருப்பது என்பது ஒரு முடிவோ, யோசனையோ அல்ல, மாறாக கிறிஸ்துவை உண்மையாக சந்திப்பது என்றும் எடுத்துரைத்தார்.
விசுவாசத்தைக் காத்தல் என்பதன் பொருள் என்ன என்றுக் கேட்கப்பட்ட கேள்விக்கு, பாதுகாத்தல் என்ற வார்த்தை அர்த்தங்கள் பல நிறைந்தது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளை எடுத்துக்காட்டிய பேராயர் பெர்னாண்டஸ் அவர்கள், விசுவாசக் கோட்பாடு அதன் புரிதலில் வளர்வதன் வழியாகப் பாதுகாக்கப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.
மதவெறியை எதிர்கொள்ளும் சூழ்நிலை, கோட்பாட்டைப் பற்றிய நமது புரிதலை முதிர்ச்சியடையச் செய்யும் மற்றும் ஒரு புதிய இறையியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று கூறிய பேராயர் பெர்னாண்டஸ் அவர்கள், இது நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும் என்றும் எடுத்துரைத்தார்
கலாச்சார உரையாடல் இல்லாத நமது செய்தி எவ்வளவு அழகாக இருந்தாலும் அது பொருத்தமற்றதாகிவிடும் அபாயம் உள்ளது என்றும் கூறிய பேராயர் பெர்னாண்டஸ் அவர்கள், எந்த ஒரு மதக் கோட்பாடும், நம்பிக்கையின் ஒரு நிகழ்வாக, வாழ்க்கையை மறுசீரமைக்கும் ஒரு சந்திப்பாக நடந்தாலொழிய உலகை மாற்றியமைப்பதில்லை என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்