உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்: பேராயர் Caccia
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் அவையைத் தான் வலியுறுத்துவதாகக் கூறினார் ஐ.நா.விற்கான நிரந்தர திருப்பீட பிரதிநிதி, பேராயர் Gabriele Giordano Caccia
ஜூலை 18, இச்செவ்வாயன்று, நியூயார்க் நகரில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையின் 88-வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில், இவ்வாறு வேண்டுகோள் விடுத்த பேராயர் Caccia அவர்கள், இரஷ்யாவால் தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகளின் தற்போதைய நிலைமை குறித்தும் எடுத்துரைத்தார்.
இரத்தம் சிந்தும் இந்த மோதலைப் பற்றிய திருப்பீடத்தின் கரிசனையை அக்கூட்டத்தில் பேராயர் Caccia அவர்கள் மீண்டும் வலியுறுத்தியதுடன், ஆயுதங்களை விடுத்து அமைதியை ஏற்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்த முடிந்த அனைத்தையும் செய்யுமாறு அனைத்துலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வேண்டுகோளையும் அவர்களுக்கு நினைவூட்டினார் பேராயர் Caccia.
புலம்பெயர்ந்தோருக்குப் புகலிடம் தந்து ஆதரவளித்த அனைத்து நாட்டவருக்கும் திருப்பீடம் நன்றி தெரிவிக்கும் அதேவேளை, தொடர்ந்து அம்மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும் மனித மாண்புடனும் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பும் வரை மனிதாபிமான ஆதரவைப் பெறுவதற்கான முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் பேராயர் Caccia
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிறப்பான நலன்களைக் கருத்தில்கொண்டு மோதலின்போது பிரிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும் விரைவாக ஒன்றிணைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் Caccia.
இத்தகைய துயரங்கள் நிறைந்த வேளையிலும், அனைத்துலகச் சமுதாயம் போரினைத் தவிர்த்து ஒன்றிணைந்த நிலையில் அமைதியை ஏற்படுத்திட வேண்டும் என்ற திருத்தந்தையின் எண்ணங்களையும் அப்பொதுச்சபையில் வெளிப்படுத்தினார் பேராயர் Caccia.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்