உணவை வீணாக்குவது, மக்களையே வீண் என தூக்கியெறிவதாகும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வணிகச்சந்தை தர்க்கவாதங்களைத் தாண்டி, உலக மக்களை உடன்பிறந்த உணர்வுடன்கூடிய குடும்பமாக நோக்கி, பசிப்பிரச்சனைக்குத் தீர்வுகாணவேண்டும் என அழைப்புவிடுத்தார் பேராயர் வின்சென்ஸோ பாலியா.
வாழ்வுக்கான திருப்பீடக்கழகத்தின் தலைவர், பேராயர் பாலியா அவர்கள், சிலேயின் சந்தியாகோவிலுள்ள இலத்தீன் அமெரிக்காவுக்கான உலக உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
உணவை வீணடிப்பதை குறைப்பது பற்றிய இக்கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் பாலியா அவர்கள், உணவை வீணாக்குவது என்பது, மக்களையே வீண் என தூக்கி எறிவதற்கு சமமாகும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை சுட்டிக்காட்டினார்.
உணவை வீணாக்குவதன் வழியாக நமக்கு அடுத்திருப்பவர் மீது அக்கறையின்றி நாம் செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது, சகித்துக்கொள்ள முடியாதது, மற்றும் பெரும் அவமானம் என வலியுறுத்திய பேராயர், இத்தகைய செயல்களுக்கு கடவுளின் முன்பும் வரலாற்றின் முன்பும் நாம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் உரைத்தார்.
இலத்தீன் அமரிக்காவில் 4 கோடியே 70 இலட்சம் பேர் போதிய சத்துணவின்றி வாடுகிறார்கள் என்ற வருத்தத்தையும் வெளியிட்ட பேராயர் பாலியா அவர்கள், அதேவேளை, உலகில் உணவு வீணாவதில் 6 விழுக்காடே இலத்தீன் அமெரிக்காவில் இடம்பெறுவதாகவும் பாராட்டை வெளியிட்டார்.
உணவை வீணாக்குகிறோம் என்ற எண்ணத்திலிருந்து ஒரு படி மேலே சென்று, நாம் அதன் வழியாக மனிதர்களை உணவின்மையால் இழக்கிறோம் என்பது குறித்து நாம் சிந்திக்கத் துவங்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார், வாழ்வுக்கான திருப்பீடக் கழகத்தின் தலைவர் பேராயர் பாலியா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்