அனுப்பப்பட்டவருக்கு இறைவன் அருளும் வலிமை
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒவ்வொரு பணிக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பவர் கடவுள் என்றும், அவர் தேர்ந்தெடுத்து, அர்ப்பணித்து அனுப்பியவருக்கு அவருடைய அருளால் வலிமையையும், துணிவையும் ஞானத்தையும் தருகிறார் என்றும் கூறியுள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின்.
ஆகஸ்ட் 12 சனிக்கிழமை அங்கோலாவில் நடைபெற்ற ஆயர் Germano Penemote அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டுத் திருநிகழ்வில் பங்கேற்று மறையுரையாற்றிய போது இவ்வாறு கூறியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், கடவுளின் முயற்சிக்கு மனிதனின் சுதந்திரமான பதில் ஒத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அழைப்பவர், அழைக்கப்பட்டவர் இருவருக்கும் இடையே உள்ள தனிப்பட்ட உறவு ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது எனவும், கடவுளைப் பற்றிய அறிவைப் பரப்புதல், சந்திக்கும் மக்களுக்கு அவருடைய சிந்தனை, வார்த்தை மற்றும் அன்பைக் கொண்டு செல்லுதல், கடவுளின் அளவற்ற இரக்கத்தை அறிவித்தல், அனுபவித்தல் போன்றவைகளே அந்நோக்கம் என்றும் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் பரோலின்.
ஒவ்வொரு பணியும் மனிதர்களுக்கான கடவுளின் மீட்புத் திட்டத்தில் உள்ளது என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள் தூய ஆவியின் துணை, ஆறுதல் மற்றும் நம்பிக்கையை அனுப்பப்பட்டவரின் பணியில் அளித்து கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான சந்திப்பை உறுதிப்படுத்துகின்றது என்றும் கூறியுள்ளார்.
கிறிஸ்துவின் தூதராகவும் திருப்பீடத்தூதுவராகவும் பணியாற்ற உள்ள பேராயர் Germano Penemote அவர்கள், மக்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான அடையாளமாகவும், தலத்திருஅவைகளுக்கிடையில் ஒற்றுமையின் அடையாளமாகவும் அனுப்பப்பட்டு ஓர் உயரிய பணியினை ஆற்ற இருக்கின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் – மனிதன், படைப்பாளர் – படைப்பு, உண்மை நீதி – மகிழ்ச்சி, மனித மனம் – மனிதகுல பிரச்சனை ஆகியவற்றிற்கு இடையே ஆழமான மற்றும் உறுதியான நல்லிணக்கத்தின் அடையாளமாகச் செயல்படவும் பேராயர் ஜெர்மானோவைக் கேட்டுக்கொண்டுள்ளார் கர்தினால் பரோலின்.
மனிதன் தன் பணியின் வெற்றி, துயரங்களில் கிறிஸ்துவின் வெளிப்பாடு, இறைவனின் முழு மீட்பு மற்றும் முழுமையைக் காண்கிறான் என்று எடுத்துரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவராக இருப்பது என்பது, மறைமுகமாகவும், விவேகமாகவும் செயல்பட்டு கடவுள்-அன்பை அறிவிப்பதாகும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்