கர்தினால் மத்தேயோ ஷூப்பி. கர்தினால் மத்தேயோ ஷூப்பி. 

கிறிஸ்துவின் நண்பராக வாழ்ந்தவர் அருள்பணி மின்சோனி

1923 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று பாசிச கொள்கையாளாரால் கொலைசெய்யப்பட்டார் அருள்பணியாளர் ஜொவான்னி மின்சோனி.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்துவின் நண்பர், மிகச்சிறியவர்களின் சகோதரர், எல்லோரும் சகோதரர்களாக இருக்கும் ஓர் உலகை உருவாக்க விரும்பியவர் மறைசாட்சியான அருள்பணியாளர் ஜொவான்னி மின்சோனி என்று கூறினார் கர்தினால் ஷீப்பி.

ஆகஸ்ட் 23 புதன்கிழமை அர்ஜெண்டினாவில் உள்ள புனித நிக்கோலோ பேராலயத்தில், 100 ஆண்டுகளுக்கு முன் மறைசாட்சியாக மரித்த அருள்பணியாளர் ஜொவான்னி மின்சோனி அவர்களுக்காக நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் இவ்வாறு கூறினார் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவரான பொலோஞ்ஞா உயர் மறைமாவட்டப் பேராயர் கர்தினால் மத்தேயோ ஷூப்பி.

1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 அன்று பாசிச கொள்கையாளாரால் கொலைசெய்யப்பட்டு மரித்த அருள்பணியாளர் ஜொவான்னி மின்சோனி அவர்களின் புனிதர் பட்டத்திற்கான மறைமாவட்ட அளவிலான கோரிக்கை அக்டோபர் 7 தூய செபமாலை அன்னையின் திருவிழாவன்று ஏற்கப்பட உள்ளது என்றும், அன்றிலிருந்து அருள்பணியாளர் மின்சோனி இறைஊழியராக அழைக்கப்பட உள்ளார் என்றும் தெரிவித்தார் கர்தினால் ஷூப்பி.

சிறந்த அருள்பணியாளரான மின்சோனி, படைப்பாற்றல் மிக்கவர், மக்களின் அன்பிற்கு சொந்தக்காரர், செபிப்பதில் ஆர்வமுள்ளவர், ஏழைகள் மற்றும் மிகவும் பின்தங்கியவர்களின் உரிமைகளுக்காகப் போராடி அதிக கவனம் செலுத்தியவர் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் ஷூப்பி.

அருள்பணியாளர் மின்சோனி
அருள்பணியாளர் மின்சோனி

பாவியை அன்பு செய்தவர் அருள்பணி மின்சோனி

இவ்வுலகம் ஒளியை வெறுக்கின்றது என்று கூறிய கர்தினால் ஷூப்பி அவர்கள், அன்பு கொண்ட மனிதர்கள் இயேசுவைப் போல எல்லாவற்றையும், ஏன் தங்கள் உயிரையும் கூட கொடுக்கின்றார்கள் என்றும், அருள்பணியாளர் மின்சோனி இதன் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்து பாவியிலிருந்து பாவத்தை வேறுபடுத்தி பாவியை நேசித்தவர் என்றும் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்க நடவடிக்கைகளின் பிறப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அருள்பணியாளர் மின்சோனி என்றும், பெண்களின் உருவாக்கம், இளையோர் மற்றும் சிறார்  பராமரிப்பு, ஆகியவற்றில் கவனம் செலுத்தி ஒரு தந்தையைப் போல செயல்பட்டவர் என்றும் கூறினார் கர்தினால் ஷூப்பி.

உலகத்தின் வெறுப்பிற்கு அஞ்சாது துணிவுடன் கிறிஸ்தவ அன்பை எடுத்துரைத்தவர் அருள்பணியாளர் மின்சோனி என்று கூறிய கர்தினால் ஷூப்பி அவர்கள், கிறிஸ்துவின் அன்பிற்காக தன் வாழ்வைக் கையளித்தல், அருள்பணித்துவ வாழ்வை முழுமையாக வாழ்தல் என்னும் இரண்டு காரியங்களை முழுமையாக தன் வாழ்வில் நிறைவேற்றியவர் அவர் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2023, 12:48