பேராயர் பால் ரிச்சர்டு காலகர். பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.  

பெருந்தொற்றுநோய்க்காலம் தந்த அனுபவம்

மாற்றங்கள் தரும் நெருக்கடிகளில் நம்மை நாமே மூழ்கடிக்காமல்,இத்தகைய மாற்றங்கள் நமது நன்மைக்கே என்பதை உறுதி செய்வது நமது கையிலிருக்கின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

நமது பலவீனம், ஒருவரோடொருவர் இணைந்திருத்தல், சார்ந்திருத்தல், மற்றவர்கள் மீதான நமது பொறுப்பு ஆகியவற்றை பெருந்தொற்றுக்காலத்தின் அனுபவம் நமக்கு நினைவூட்டியுள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றுப்படி ஆரோக்கியமான சமூகம் என்பது ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

செப்டம்பர் 20 புதன்கிழமை நியுயார்க் நகரில் நடைபெற்ற தொற்றுநோய் தடுப்பு, பாதுகாப்பு, மற்றும் முன்தயாரிப்புக்கான உயர்மட்டக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

அரசின் அனைத்து நிலைகளிலும், துறைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் அனைவரும் உழைத்ததைப் பெருந்தொற்றுக்காலத்தில் காண முடிந்தது என்று கூறிய பேராயர் அவர்கள், நோய் கண்டறிதல், சிகிச்சை முறைகள், தடுப்பூசிகளை விரைவாக உருவாக்குதல், உற்பத்தி செய்தல், விநியோகித்தல் ஆகிய முயற்சிகளிலும் உண்மையாக செயல்படுவதையும் நினைவுகூர்ந்துள்ளார்.

இருப்பினும், வளர்ச்சி குறைந்த நாடுகளில் தொற்று நோய்க்கான தடுப்பூசி பெற்றவர்களின் விழுக்காடு வளர்ச்சியடைந்த நாடுகள் பெற்ற விழுக்காட்டில் பாதியளவே என்று கூறிய பேராயர் அவர்கள், உலகளாவிய ஒற்றுமையை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு, குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு, நலவாழ்வுத் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய அணுகலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  

அவசரநிலை நலவாழ்விற்கான அனைத்து நம்பகமான பதில்களும் மனித உரிமைகள், கருத்து சுதந்திரம், முழுமன சுதந்திரம், மத சுதந்திரம், நம்பிக்கை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள பேராயர் காலகர் அவர்கள்,  கலாச்சார உணர்வு மற்றும் இறையாண்மையை மதிக்கும் அதே வேளையில், மக்களுக்கு மருந்துகள் மற்றும் போதுமான நலப்பாதுகாப்பு வழங்க நாடுகளுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒற்றுமை வழிமுறைகளையும் அவை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாற்றங்கள் தரும் நெருக்கடிகளில் நம்மை நாமே மூழ்கடிக்காமல்,இத்தகைய மாற்றங்கள் நமது நன்மைக்கே என்பதை உறுதி செய்வது நமது கையிலிருக்கின்றது என்று கூறியுள்ளார் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2023, 09:49