இனவெறியை அகற்றும் முயற்சியில் முழு வெற்றி இன்னுமில்லை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவந்துள்ளபோதிலும், வெளிப்படையான மாற்றங்கள் இடம்பெறுகின்றபோதிலும், இனவெறியை முற்றிலுமாக அகற்றும் போராட்டத்தில் முழுமையான வெற்றியை இவ்வுலகம் இன்னும் காணவில்லை என கவலையை வெளியிட்டார் ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தர பிரதிநிதி, பேராயர் கப்ரியேலே காச்சா.
‘இனவெறி, இனத்தின் அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படல், அயலார் வெறுப்பு மற்றும் அது தொடர்புடைய சகிப்பற்றதன்மை’ என்ற தலைப்பில் அக்டோபர் 30, திங்கள்கிழமையன்று ஐ.நா.வின் நியூ யார்க் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், இனவெறிக் கொள்கைகளால் நாடுகளுக்குள்ளும் அனைத்துலக நாடுகள் அளவிலும் பதட்ட நிலைகள் உருவாகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இனவெறி முன்சார்பு எண்ணங்களுடன் உருவாக்கப்படும் எந்த ஒரு சட்டத்தையும் அனைத்துலக சமுதாயம் எதிர்க்கிறது என உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், கடவுளால் வழங்கப்பட்ட மாண்புடன் வாழும் மனிதகுல குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே அடிப்படை மனித உரிமைகளும் கடமைகளும் உள்ளன என்பது அங்கீகரிக்கப்பட்டு ஏற்கப்படவேண்டும் என உரைத்தார்.
பொருளாதார, கலாச்சார, சமுதாய வாழ்வில் பங்குபெற அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன், நாட்டின் வளங்கள் நியாயமாக பகிரப்படுவதுடன், அனைவரும் சட்டத்தின் கீழ் சரிசமமாக நடத்தப்படுவது குறித்த உறுதியும் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் பேராயர்.
ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் என்ற தப்பான கொள்கையின் அடிப்படையில் இனவெறி பிறக்கிறது என்ற பேராயர், இனவெறிதாக்குதல், அயலார் மீது வெறுப்பு, அகதிகள் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் தேடுவோரை பாகுபாட்டுடன் நடத்துதல் ஆகியவை, தான் மற்றவரைவிட உயர்ந்தவன் என்ற தப்பான மனநிலையாலேயே பிறக்கின்றன என எடுத்துரைத்தார்.
அடுத்தவர் குறித்த அச்சத்தால் தங்களை மூடி, அவர்களை வெறுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்வதையும் பார்க்கிறோம் எனவும் கூறினார் பேராயர் காச்சா.
புலம் பெயரும் மக்களை ஓர் அரசியல் பிரச்சனையாக நோக்காமல், அவர்களை மாண்புடன் கூடிய மனிதர்களாக நடத்தவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த பேராயர், மதசகிப்பற்ற தன்மைகள் பெருகிவருவது குறித்தும், ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் சார்பு, தேசியம் அல்லது சமுதாயம், உடைமைகள், பிறப்பு என எந்த ஒரு அடிப்படையிலும் மனிதர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என மேலும் விண்ணப்பம் ஒன்றை விடுத்தார் ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்