மனித வர்த்தகம் செய்பவர்கள் மனிதநேய உணர்வை இழக்கின்றார்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருஅவையில் ஆயர்களின் பங்கு, பொதுநிலையினரின் பணிஅனுபவம் கொண்ட கூட்டுப்பொறுப்புணர்வு, வன்முறை மற்றும் முறைகேடுகளை தடுக்க உதவும் வகையில் கேட்டல், உரையாடலைக் கொண்டுள்ள ஒருங்கிணைந்த பயணம், மனித வர்த்தகம், தலத்திருஅவை சீர்திருத்தங்கள், ஆயர் பணி என்பன போன்றவைகள் குறித்து உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார் முனைவர் பவுலோ ருபீனீ.
அக்டோபர் 20 வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு கூறிய திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருபினி அவர்கள், "பங்கேற்பு, பொறுப்பு மற்றும் அதிகாரம்" என்ற தலைப்பின்கீழ் ஆயர் மாமன்றப் பிரதிநிதிகள் கலந்துரையாடினர் என்றும், அதிகாரம் என்பது ஆதிக்கம் அல்ல, மாறாக பணி என்பது வலியுறுத்தப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக்கூடாது மாறாக அடையாளப்படுத்தும் திறனைக் கொண்டிருக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டதாக எடுத்துரைத்த ருபீனி அவர்கள், ஏழைகளின் பணியில் அருள்பணியாளர்களின் பங்கு, புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் குறித்து பகிரப்பட்டதாகவும் கூறினார்.
தங்க இடமின்றி தெருக்களில் துன்புறுபவர்களின் அழுகை, மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்ட இலட்சக் கணக்கான மக்களின் துன்பம் ஆகியவற்றிற்கு காரணமான "மூன்றாம் உலகப் போருக்கு" பங்களிப்பவர்களின் இதயங்களில் மனிதநேய உணர்வுகள் மீண்டும் துளிர்க்கவும், அவர்களின் மனமாற்றத்திற்காகவும் ஆயர்கள் அழைப்பு விடுக்க வேண்டும் என்று பகிரப்பட்டதாகவும் எடுத்துரைத்தார் முனைவர் ருபீனீ.
தலத்திருஅவையில் இணை பொறுப்பு என்பது ஈடுபாடு, ஒருங்கிணைப்பு என்னும் இரண்டினை உள்ளடக்கியது என்றும், இதற்கான புள்ளி விவரங்கள் மற்றும் தரவுகள் பொதுநிலையின பங்கேற்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டது என்பதை எடுத்துரைத்த முனைவர் ருபீனீ அவர்கள், திருத்தந்தையுடன் சேர்த்து 365 பேர் ஆயர் மாமன்றத்தில் பங்கேற்று வந்த நிலையில் தற்போது பொது நிலையினருடன் சேர்த்து மொத்தம் 464 பங்கேற்பாளர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தகவல் தொடர்பு ஆணையத்தின் செயலரான ஷீலா பைர்ஸ் கூறுகையில், அருள்பணியாளர்கள், பொதுநிலையினர், என அனைவரும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது மனம், பொருளாதார மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு காரணமாக அமைகின்றன என்றும், இவை அனைத்தும் திருஅவையின் நம்பகத்தன்மை இழக்கக் காரணமாகின்றன என்றும் எடுத்துரைத்தார்.
இவ்வன்முறையைத் தவிர்க்க கட்டுப்பாட்டுமுறை அவசியம் என்றும், கேட்டல் உரையாடல், ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு செயல்முறை வேண்டும் என்று எடுத்துரைத்த ஷீலா அவர்கள், தலத்திருஅவைக்குத் தேவையான சீர்திருத்தங்கள், நிதிக் கட்டமைப்புகள், பொருளாதாரத் துறையில் அதிக வெளிப்படைத்தன்மையை அடைய தேவையான மாற்றங்கள் பற்றி ஆயர் மாமன்றத்தில் பேசப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.
"ஒரே திருஅவையாக இருப்பது என்பது ஒன்றாக வாழ்வது, ஒற்றுமையை அனுபவிப்பது" என்று அடிக்கோடிட்டுக் காட்டிய பேராயர் க்ருசாஸ் அவர்கள், 45 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களில் ஒன்றாகப் பேசவும் விவாதிக்கவும் வாய்ப்பாக அமைந்த இந்த உலக ஆயர் மாமன்றம் ஒருங்கிணைந்த பயணம் என்ற கருப்பொருளை வலுப்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்