திருத்தந்தையின் அருகில் கர்தினால் மாரியோ கிரேக். திருத்தந்தையின் அருகில் கர்தினால் மாரியோ கிரேக்.   (ANSA)

காயமடைந்த மனுக்குலத்தில் கடவுளன்பாக செயல்படுவோம்

ஒருங்கிணைந்த பயணச் செயல்முறை உலகளாவிய திருஅவைக்கும், குறிப்பிட்ட தலத்திருஅவைகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவை வளர்ச்சியடைந்து பெருகிய முறையில் ஒருங்கிணைந்த பயணமாக மாறுவதற்கான அழைப்பைப் பெறுகிறது என்றும், காயமடைந்த மனிதகுலத்தின் மீது கடவுளின் அன்பின் அடையாளமாக செயல்பட நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார் கர்தினால் மாரியோ கிரேக்.

அக்டோபர் 4 புதன்கிழமை வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற 16ஆவது உலக ஆயர்கள் மாமன்ற தொடக்க கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது செயலாளர் கர்தினால் மாரியோ கிரேக்.

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கடவுள் அன்பின் அடையாளமாகவும் கருவியாகவும் நாம் மாறவும், கடவுளின் இத்தகைய அன்பாகிய நாம் இன்றைய காயப்பட்ட மனிதகுலத்தை குணப்படுத்தும் மருந்தாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய கர்தினால் கிரேக் அவர்கள், ஒரே திருஅவையாக கடவுளன்பின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இவ்வுலகில் வாழும் மக்கள், வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியின் அர்த்தத்தைத் தேடுகிறார்கள் என்றும், இயேசுவின் அழகான மற்றும் இரக்கமுள்ள முகத்தை நம்மில் காண திருஅவையை மன்றாடுகிறார்கள் என்று குறிப்பிட்ட கர்தினால் கிரேக் அவர்கள், ஒருங்கிணைந்த திருஅவை  செவிசாய்க்கும் திருஅவை என்றும் கூறினார்.

திருஅவை மற்றும் ஒருங்கிணைந்த பயணம் இவை இரண்டும் ஒரே பொருள்தரக்கூடியவை என்று கூறிய கர்தினால் கிரேக் அவர்கள், வரலாற்றின் வெளிச்சத்தில், "கடவுளின் வார்த்தையைக் கேட்பது, கடவுளின் விருப்பத்தைப் புரிந்துகொள்வது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரிகளையும் மேற்கோள்காட்டி எடுத்துரைத்தார்.

ஒருங்கிணைந்த பயணச் செயல்முறை உலகளாவிய திருஅவைக்கும், குறிப்பிட்ட தலத்திருஅவைகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும்,  திருஅவையில் உள்ள செழுமை மற்றும் பல்வேறு கொடைகள், திருத்தூதர்களின் காலத்தில் இருந்ததைப் போலவே இன்றும் ஒரே இதயம் மற்றும் ஒரே ஆன்மாவின் அனுபவத்தை கேட்க உதவுவதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் கிரேக்.

ஆண் பெண் துறவறத்தார், ஆண் பெண் பொது நிலையினர் திருத்தொண்டர்கள், அருள்பணியாளர்கள் என அனைத்து நிலையினரையும் உறுப்பினர்களாக் கொண்ட இந்த 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றமானது, நல்லிணக்கம் மற்றும் பன்முகத்தன்மை கொண்டதாக ஒற்றுமையின் பணியில் செயல்படுகின்றது என்பதனை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் கர்தினால் கிரேக்.

Viboldone துறவு இல்லத்தை சார்ந்த பெனடிக்டைன் சபை அருள்சகோதரி Ignazia Angelini கூறுகையில் ஒருங்கிணைந்த பயணத்தின் ஆற்றல் மிக்க சக்தியை நாம் அனைவரும் நம்மில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், தேவையற்ற உரையாடல்கள் மற்றும் வெற்றுப் பேச்சுக்களால் சிதறடிக்கப்பட்டு இன்றைய தலைமுறை எளிதில் சோர்வடைகின்றது என்றும் கூறினார்.

மிகச்சிறியவர்களில் கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்றார் என்று கூறிய அருள்சகோதரி Angelini அவர்கள், தாழ்ச்சியான கடவுளின் ஆவி குழந்தைத்தனம் அல்ல மாறாக நமது ஆழமான இருப்பு மற்றும் புதிய, மென்மையான வேர் என்றும் தந்தையை நன்கு அறிந்த இயேசு நமக்கு வெளிப்படுத்த விரும்புவதை ஞானத்தின் பாதையில் கண்டறிய வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், மனித இடர்பாடுகளில் கடவுளின் பாதையில் நாம் வைக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்து, எல்லா மனிதர்களிடமும் செவிசாய்த்து மரியாதையுடன் இருக்க வேண்டும் என்றும், நாம் எங்கு செல்ல வேண்டும் என்பதற்கான வழியும், வாழ்வில் நடக்கும் அனைத்தையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளவும், தூய ஆவியார் நமக்கு உதவுகின்றார் என்றும் கூறினார் அருள்சகோதரி ஆஞ்சலினி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 October 2023, 10:34