திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்  (ANSA)

ஏழு கல்வியாளர்களுக்கு ஜோசப் ராட்ஸிங்கர் விருதுகள்

மனிதகுலத்தின் அடிப்படை கேள்விகளுக்கான தேடலில் அதிக பங்களிப்பிற்காக 7 கல்வியாளர்களுக்கு விருதுகள்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

ஜோசப் இராட்ஸிங்கர் பெனடிக்ட் XVI வத்திக்கான் அறக்கட்டளையின் 6வது, அதாவது, இந்த ஆண்டிற்கான விருது விழாவினை அக்டோபர் 17 அன்று நடத்தவுள்ளதாகவும், இதில் மனிதகுலத்தின் கேள்விகளுக்கும்,  உண்மையைத் தேடுவதிலும் அதிக பங்களித்த 7 கல்வியாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள் எனவும் அவ்வறக்கட்டளை அறிவித்துள்ளது.

திருத்தந்தை பெனடிக்ட் XVI ஆல் முன்மொழியப்பட்ட விரிவுபடுத்தப்பட்ட பகுத்தறிவு வாதத்தை விளக்கும் அறிவியல் கட்டுரைகள் அல்லது கல்வித் திட்டங்களின் மூலம் ஆராய்ச்சி அல்லது கற்பித்தல் துறையில் தாக்கங்களை ஏற்படுத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விருதுகளைப் பெறுபவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதகுலத்தின் அடிப்படை கேள்விகளுக்கான தேடலில் உண்மை மற்றும் பகுத்தறிவின் திறந்த பார்வையை ஆதரிக்க, மறைந்த திருதந்தையின் விருப்பத்தால் இது உருவானதெனவும்,  மத்ரித்தில் உள்ள பிரான்சிஸ்கோ டி விட்டோரியா பல்கலைக்கழகம் மற்றும் ஜோசப் ராட்ஸிங்கர்-பெனடிக்ட் XVI வத்திக்கான் அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராட்ஸிங்கர் அறக்கட்டளையின் தலைவர், இயேசுசபை அருள்பணி பெதரிகோ லொம்பார்தி, பிரான்சிஸ்கோ டி விட்டோரியா பல்கலைக்கழகத்தின் அதிபர் பேராசிரியர் டேனியல் சடா மற்றும் பேராசிரியர்கள்   ஸ்தேபனோ ஜமாக்னி, மார்தா பெர்டோலாசோ, ரஃபேல் விகுன்யா மற்றும் சேவியர் பிரேதேஸ் ஆகியோர் உட்பட 15 நாடுகளிலிருந்து 63 பல்கலைக்கழகங்கள், 4 மொழிகளில் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்து, இந்த ஆண்டு விருதுக்கென ஏழு பேரை தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிற்க்கு வத்திக்கானின் விசுவாசக் கோட்பாட்டிற்கான துறையின் தலைவர் கர்தினால் லூயிஸ் பிரான்சிஸ்கோ லதாரியா பெரர் அவர்கள் தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அன்னா ரோலண்ட்ஸுக்கு ஆராய்ச்சிப் பிரிவிற்கான விருதும், இதே பிரிவில் ஐடிஐ கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் அடிப்படை இறையியல் பேராசிரியரும், ஆக்ஸ்போர்டில் உள்ள பிளாக்ப்ரியர்ஸ் ஹாலில் ஆராய்ச்சியாளருமான சைமன் மரியா கோப்புக்கும், மற்றும் கற்பித்தல் பிரிவில், பல்கலைக்கழக தலைமைத்துவ கல்வி விருதுகள் பிரான்சிஸ்கோ டி விட்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜுவான் செரானோ மற்றும் கரோலா டியாஸ் டி லோப்-டியாஸ் ஆகியோருக்கும்,  திருச்சிலுவை பாப்பிறை பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் நம்பிக்கைக்கான இடைநிலை ஆவண மையத்தில் செயலில் உள்ள DISF கல்வி டிஜிட்டல் தளத்தின் இயக்குநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள் யூசெப் டான்செல்லா-நிட்டி, ஸ்தேபனோ ஒலிவியா ஆகியோருக்கும், இறையியல் பேராசிரியரான எலிசபெத் நியூமனுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 October 2023, 16:00