வத்திக்கான் ஆயர் மாமன்றக் கூட்டம் வத்திக்கான் ஆயர் மாமன்றக் கூட்டம்  (Vatican Media)

மத்திய கிழக்கு, உக்ரைன், ஈராக், ஆப்பிரிக்காவின் அமைதிக்காக

343 உறுப்பினர்கள், உலகம் முழுவதும் உள்ள திருஅவைகள், மத்திய கிழக்கு, உக்ரைன், ஈராக், ஆப்பிரிக்காவின் அமைதிக்கான வேண்டுதல்களில் ஒன்றிணைந்த ஆயர் மாமன்றம்.

திமினா செலின் இராஜேந்திரன் – வத்திக்கான்

 வியாழக்கிழமை ஆயர் மாநாட்டில், 343 உறுப்பினர்கள் பங்கேற்று, மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான உரையாடல்; பழங்குடி சமூகங்களில் காலனித்துவத்தின் தாக்கம்;  ஓப்புரவு அருட்சாதனத்தின் முக்கியத்துவம்; இயேசுவைச் சந்திக்கும் தாகத்தில் இளைஞர்களைக் ஈடுபடுத்துவது ஆகிய  கருப்பொருள்களில் 36 பேர் உரையாற்றினார்.

அமைதிக்கான ஓருங்கிணைந்து வேண்டுதல் ஆழமான தருணம்

இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய வம்சாவளி அரபு கத்தோலிக்கர் மற்றும் போக்லோர் இயக்கத்தின் தலைவரான மார்கரெட் கார்ரம் அவர்கள் ஆயர் மன்றத்தில் உரையாற்றியபோது, போர் தொடங்கியதிலிருந்து, தனது இதயம் உடைந்துவிட்டதெனவும், அனைவருடனும் ஓருங்கிணைந்து வேண்டுதலில் ஈடுபட்டது மிகவும் ஆழமான தருணம் என்றும் கூறினார்.

ஒன்றாக நடப்பது, உரையாடுவது, தன்னைப் பிறரால் சவாலுக்கு ஆளாக்குவது என்றால் என்ன என்பதை இந்த அனுபவம் தனக்குக் கற்பித்ததாகவும்,  ஓருங்கிணைந்த பயணம் என்பது ஒரு வழிமுறை மட்டுமல்ல, அது திருஅவையின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் என்றும் அவர் உரைத்தார்.

மேலும், அனைத்துலக சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்ததுடன்,  மனித உரிமைகளுக்கான மரியாதை மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அனைவரின் அர்ப்பணிப்பும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய திருச்சபையுடன் இணைந்திருத்தல்

ஆப்பிரிக்கா நாட்டின் ஆயர்கள் மாநாட்டின் தலைவரான கேமரூன், பமெண்டாவின் பேராயர் ஆண்ட்ரூ நிக்கேயா புவான்யா அவர்கள்,  ஓருங்கிணைந்த பயணம் ஆப்பிரிக்க கலாச்சாரத்தின் ஒரு பகுதி, ஏனெனில் அவர்கள் எப்போதும் ஒரு குடும்பமாக ஒன்றாக விஷயங்களைச் செய்வதாகவும், ஆப்பிரிக்காவில் உள்ள பிரச்சனைகளால், சில நேரங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, கைவிடப்பட்டதாக உணர்ந்ததாகவும்,  ஆனால் ஆயர் மாநாட்டில் ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரச்சனைகளுக்காகவும், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்காகவும் ஒன்றாக செபிப்பது உலகளாவிய திருஅவையுடன் இணைந்திருப்பதை உணர்த்துவதாகத் தெரிவித்தார்.

வெவ்வேறு மொழிகளை ஒன்றிணைக்கும் நற்செய்தி

பாக்தாத் சுகாதார மையத்தின் மருத்துவரும், இயேசுவின் புனித இதய  சபையை சேர்ந்தவருமான அருள்சகோதரி கரோலின் ஜார்ஜிஸ் தனது சொந்த மொழியான அரபு மொழியில் நற்செய்தியைப் படித்தார், அவர் வாசித்த நற்செய்தி அனைவராலும் புரிந்து கொள்ளப்பட்டது என்பது  அதிர்ச்சியாகவும், ஆயர் மாமன்றத்தில் ஒரே குடும்பம் எனும் உணர்வை  அளிப்பதாகவும் பகிர்ந்தார்.

இருபது வருடங்களாகத் போரில் ஈடுபட்டுள்ள நாட்டிலிருந்து வந்துள்ளதாகவும், அங்கு கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர், ஆனால் அவர்களின் திருஅவை தியாகிகளின் இரத்தத்தால், அவர்கள் தொடர்ந்து செல்வதற்கான உத்வேகத்தை அளிக்கிறது என்றும், தியாக பூமியில் கிறிஸ்தவர்களாக கண்ணியத்துடன் வாழ்வது சரியானது,  நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்,

ஆயர் மன்றத்தில் தாங்கள் செய்யும் பணியில் கடவுள் இருக்கிறார், அவர்களைத் தேர்ந்தெடுத்து, உரோமுக்கு வருவதற்கு முன்பே தயார்படுத்தியுள்ளார் என்றும்,  முதல் கிறிஸ்தவர்களின் பகிர்வு அனுபவத்தை வாழ்வதாகவும், மேலும் இந்த உறவின் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட ஒரு பெரிய பலத்துடன்  வீடு திரும்புவேன் என்றும் பகிர்ந்தார்.

இறுதியாக, தகவல் ஆணைக்குழுவின் தலைவரான, தகவல்தொடர்புக்கான துறையின் தலைவர் டாக்டர் பவுலோ ருபினி அவர்கள் வியாழன் அன்று அபரேசிடா மற்றும் பிலார் அன்னையின் திருநாள் என்பதை நினைவு கூர்ந்து, இந்த ஓருங்கிணைந்த பயணத்தில் அன்னை மரியாளின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதாக தெரிவித்தார். 

அடிநில கல்லறைகளுக்கு யாத்திரை

ஆயர் மாமன்றத்தில் பங்கேற்றோர் வியாழன் பிற்பகலில், புனிதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் புனித இடங்களுக்கும், கலிஸ்டஸ், தொமித்தில்லா, மற்றும் செபாஸ்தியான அடிநிலக் கல்லறைப் பகுதிகளுக்கும் புனித யாத்திரை சென்று வந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2023, 16:18