திருப்பீட சமூக தொடர்புத் துறையின் தலைவர், பவுலோ ருபீனி. திருப்பீட சமூக தொடர்புத் துறையின் தலைவர், பவுலோ ருபீனி. 

பெண்கள் , இளையோர், ஏழைகள், புலம்பெயர்ந்தோர் பற்றிய பணி...

பெண்கள், ஏழைகள், புலம்பெயர்ந்தோர். பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் ஆகியவற்றைப் பற்றிய கலந்துரையாடலானது 35 சிறு குழுக்களாகப் பிரிந்து 351 உலக ஆயர்கள் மாமன்றத்தின் உறுப்பினர்களால் நடத்தப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் பணியில் மேய்ப்புப்பணியின் செயல்பாடுகள் அடிப்படையானது, திருஅவையில் பெண்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் விதமாக தீவீரமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும், இளையோர் மற்றும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்பன குறித்து ஆயர் மாமன்றத்தில் கலந்துரையாடப்பட்டதாக எடுத்துரைத்தார் முனைவர் பவுலோ ரூபினி.

அக்டோபர் 6 வெள்ளிக்கிழமை உலக ஆயர்கள் மாமன்றம் குறித்த இரண்டாம் கட்ட செய்தியாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு கூறிய திருப்பீட சமூகத்தொடர்புத்துறை தலைவர் பவுலோ ருபினி அவர்கள், மதங்களுக்கிடையேயான உரையாடல், தலத்திருஅவையின் செயல்பாடுகள், பல்சமய உரையாடல், ஏழைகள், துன்புறும் உக்ரைன் மக்கள் ஆகியவற்றைப் பற்றிக் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பெண்கள், ஏழைகள், புலம்பெயர்ந்தோர். பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் ஆகியவற்றைப் பற்றிய கலந்துரையாடலானது 35 சிறு குழுக்களாகப் பிரிந்து 351 உலக ஆயர்கள் மாமன்றத்தின் உறுப்பினர்களால் நடத்தப்பட்டது என்றும், அருள்பணித்துவ பயிற்சியில் ஆரம்பித்து பொது மக்கள் வரை உள்ள அனைத்து பிரச்சனைகள் குறிப்பாக ஏழை மக்களின் நிலை பற்றி எடுத்துரைக்கப்பட்டதாகவும் கூறினார்.

அக்டோபர் 6 வெள்ளிக்கிழமை காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்ட காலை அமர்வானது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது என்றும், குழுக்களின் பிரதிநிதிகள் 18 பேர் தங்களது அறிக்கையினை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர் என்றும் கூறிய ருபினி அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலையில் ஆயர் மாமன்ற செயல்பாடுகள் பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புத்தகம் மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதை எடுத்துரைத்த ருபினி அவர்கள், அருள்சகோதரி ஷீலா பைர்ஸ் அவர்கள் பன்முகத்தன்மை மற்றும் ஒன்றிணைந்து நடத்தல் பற்றி எடுத்துரைத்த கருத்துக்களான "பதற்றத்திற்குப் பஞ்சமில்லை" என்றாலும் ஒவ்வொரு குழுவிலும் வெவ்வேறு கண்டங்களைச் சேர்ந்தவர்கள் இருப்பது மகிழ்ச்சி நிறைந்த சூழலைத் தருகின்றது என்றுக் கூறியதாகவும் எடுத்துரைத்தார்.  

இளையோர்க்கான அங்கீகாரம், பெண்கள் பங்கேற்பின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்த அருள்சகோதரி ஷீலா, அனைவரையும் உள்ளடக்கிய செயல்முறையாக செவிமடுக்கக் கற்றுக்கொள்ளும் திருஅவையாக ஆயர்கள் மாமன்றம் செயல்படுகின்றது என்றும் முன்தயாரிப்பு செப வழிபாடுகள் கூட்டங்கள் ஆகியவை பகுத்தறிவின் பிரதிபலிப்புக்களாக வெளிப்பட்டன என்றும் கூறினார்.

திருஅவை சட்டங்கள், மறைமாவட்ட செயல்பாடுகளின் பரிமாணங்கள், திருஅவை கட்டமைப்புக்களின் மறுஆய்வு ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதாக எடுத்துரைத்த ரூபினி அவர்கள், கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியுடனான உறவு, புலம்பெயர்ந்தோர் பரமாரிப்புப்பணி, இளையோர் அங்கீகாரம், ஏழைகள் ஆகிய கருத்துக்களில் பேசப்பட்ட கலந்துரையாடல் அறிக்கையானது குழு பிரதிநிதிகளால் எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 October 2023, 12:44