வருங்காலத் தலைமுறைக்கான பரிசு அழிவுக்குள்ளான உலகா?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இயற்கை மீதான அக்கறைக் குறித்து இவ்வாண்டு வெளியிடப்பட்ட திருத்தந்தையின் Laudate Deum சுற்றுமடல் எடுத்துரைக்கும் மதிப்பீடுகளை மீண்டும் வலியுறுத்தும் நோக்கத்திலேயே திருத்தந்தையின் துபாய் பயணம் இருக்கும் என அறிவித்தார் கர்தினால் மைக்கேல் செர்னி.
காலநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ள டிசம்பர் 1 முதல் 3 வரை ஐக்கிய அமீரகத்தின் துபாய்க்கு திருத்தந்தை செல்லவுள்ளது குறித்து கருத்து வெளியிட்ட ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டிற்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் செர்னி அவர்கள், இந்த கருத்தரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வது, இவ்வுலகை அழிவுக்குள்ளான ஒன்றாக நம் இளைய தலைமுறைக்கு விட்டுச் செல்லக் கூடாது என உலகத் தலைவர்களை விண்ணப்பிப்பதாக இருக்கும் என தெரிவித்தார்.
ஏறக்குறைய எழுபதாயிரம் பேர் கலந்துகொள்ளும் Cop28 என்ற இந்த கருத்தரங்கு நவமபர் 30ஆம் தேதி துவங்கி டிசம்பர் 12 ஆம் தேதி வரை இடம்பெற உள்ள நிலையில், டிசம்பர் முதல் மூன்று நாட்களும் அதில் திருத்தந்தை கலந்துகொள்கிறார்.
உலகம் வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டு பிரான்சின் பாரீசில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும், அமல்படுத்தப்படுவது குறித்தும் விவாதிக்க உள்ள துபாயின் Cop28 கூட்டம், திருத்தந்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட Laudate Deum அப்போஸ்தலிக்க ஏட்டின் பரிந்துரைகளை ஒட்டியதாக தன் கலந்துரையாடல்களை நடத்திச்செல்லும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் கர்தினால் செர்னி.
2015ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் வெளியிடப்பட்ட கால நிலை மாற்றம் குறித்த Laudato si' என்ற ஏட்டின் தொடர்ச்சியாக 2023 அக்டோபர் 4ஆம் தேதி புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழாவன்று திருத்தந்தை வெளியிட்ட Laudate Deum ஏட்டில், தங்கள் குழந்தைகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் ஓர் அழிவுக்குள்ளாக்கப்பட்ட உலகை விட்டுச் செல்வது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.,
அண்மை அப்போஸ்தலிக்க ஏட்டில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை மீண்டும் கோடிட்டுக் காட்டவும், வலியுறுத்தவும், சிறந்தமுறையில் எடுத்துரைக்கவும், திருத்தந்தையின் துபாய் பயணம் இருக்கும் என்ற கர்தினால் செர்னி அவர்கள், நம்மால் உருவாக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு நாம்தான் தீர்வுகாண வேண்டும் என்பதை மனதில் கொண்டவர்களாக, இக்கருத்தரங்கில் பங்குபெறும் உலகத்தலைவர்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்