நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டோர் குறித்த கருத்தரங்கு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
மக்கள் எவ்வளவு தூரத்திற்கு நவீன அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்படும் நிலையிலுள்ளார்கள் என்பது குறித்து ஆராயும் கருத்தரங்கு நவம்பர் 13, திங்களன்று வத்திக்கானில் இடம்பெற்றது.
திருப்பீடக் கல்விக் கழகம், ஆஸ்திரேலிய தூதரகம் மற்றும் Walk Free என்ற அமைப்பினால் ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கிற்கான திருத்தந்தையின் செய்தி, திருப்பீட சமூக அறிவியல் கழகத்தின் வேந்தர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் இச்செய்தி, உலகின் பலபகுதிகளில் இன்னும் நிலவும் நவீன அடிமைத்தனம் குறித்து விவாதிக்க முன்வந்திருக்கும் இந்த கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் வாழ்த்துக்களை முதலில் வெளியிட்டுள்ளது.,
இக்கருத்தரங்கில் பங்குபெறுவோர் அனைவரிலும் விடுதலை மதிப்பீடுகள், ஒருவருக்கொருவர் மதிப்பு மற்றும் ஒருமைப்பாடு, மனிதனின் மீறமுடியாத உரிமைகளை பாதுகாப்பதற்கான அர்ப்பணம் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை குறித்த புதுப்பிக்கப்பட்ட அக்கறை இடம்பெறும் என்ற திருத்தந்தையின் ஆழமான நம்பிக்கையும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித மாண்பை சிதைக்கும் அடிமைத்தனம் எந்த வகையில் இருந்தாலும் அதனை எதிர்த்துப் போரிட்டு அழிக்க சமூக மற்றும் அரசியல் தலைவர்களுக்கும் அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் அழைப்புவிடுப்பதாக திருத்தந்தை அச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக அளவில் நவீன அடிமைத்தனம் குறித்து ஆய்வு செய்துவரும் Walk Free அமைப்பு, தன் இவ்வாண்டு அறிக்கையில், 2021ஆம் ஆண்டில் ஏறக்குறைய 5 கோடி பேர், அதாவது உலகில் 150க்கு ஒருவர் என்ற விகிதத்தில் நவீன அடிமைத்தனத்தில் வாழ்ந்ததாகத் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்