போர் பகுதியில் ஓர் எளிமையான குடில் போர் பகுதியில் ஓர் எளிமையான குடில்  (AFP or licensors)

விசுவாசமும் செபமும் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்கள்

புனித பூமியில் துன்ப துயர்களையும், பகைமையையும் வெறுப்புணர்வுகளையும், மனிதனை மனிதன் கொல்வதையும், கிறிஸ்து பிறப்பு காலத்தில்கூட போர் நிறுத்தம் இல்லாமையையும் கண்டேன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நம்மைக் குறித்த கடவுளின் விருப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நம் பாதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலேயே துன்பங்களும் மோதல்களும் அதிகரிக்கின்றன என தெரிவித்தார் கர்தினால் கொன்ராட் க்ரயேவிஸ்கி.

திருத்தந்தையின் பிறரன்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்து செயல்படும் கர்தினால் க்ரயேவிஸ்கி அவர்கள், திருத்தந்தையின் பிரதிநிதியாக அண்மையில் காசா பகுதிக்குச் சென்று திரும்பியபின் அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறினார்.

போர் இடம்பெறும் புனித பூமிக்கு திருத்தந்தையின் சார்பாக கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்கு துன்ப துயர்களையும், பகைமையையும் வெறுப்புணர்வுகளையும், மனிதனை மனிதன் கொல்வதையும், தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லா நிலைகளையும், கிறிஸ்து பிறப்பு காலத்தில்கூட போர் நிறுத்தம் இல்லாமையையும் கண்டதாக கவலையுடன் தெரிவித்தார் கர்தினால்.

உலகின் மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்களான விசுவாசம் மற்றும் செபத்துடன் புனித பூமிப் பகுதிக்குச் சென்று, அங்கு இயேசு வாழ்ந்த அனைத்து இடங்களையும் சந்தித்தவேளையில், ஏன் அங்கு அமைதியை காணமுடியவில்லை என்ற கேள்வியே தன்னில் தொக்கி இருந்ததாகக் கூறும் கர்தினால் க்ரயேவிஸ்கி அவர்கள், கிறிஸ்மஸ் காலத்தில் கூட காசாவிலும் உக்ரைனிலும் போரும் கொலைகளும் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனைத் தருவதாக உள்ளது என்றார்.

இயேசுவின் கல்லறைக்குச் செல்ல நாம் குனிந்துதான் செல்லவேண்டும் என்பதுபோல் பெத்லகேமிலும் மறையுண்மைக்கு முன்னால் நாம் குனிந்தே செல்லவேண்டும் என்பதை மனிதகுலம் மறந்து வாழ்வதால் இத்தகைய பிரச்சனைகள் இடம்பெறுகின்றன என்ற கர்தினால், கடவுளின் இடத்தில் மனிதகுலம் தன்னை நிறுத்தி, ஆணையிடவும் அதிகாரம் காட்டவும் முயலும்போது, அங்கு கருணையையும் அன்பையும் விலக்கிவிடுவதால் அமைதியின்மை உருவாகிறது என்றார்.

இறைவனின் மறையுண்மைகளை நாம் புரிந்துகொள்ளவும், அவரின் அன்பையும் இரக்கத்தையும் உணர்ந்துகொள்ளவும், தாழ்ச்சி என்ற உயர்பண்பு நமக்குத் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார் கர்தினால் க்ரயேவிஸ்கி.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2023, 13:39