உடன்பிறந்த உறவு குறித்த Zayed விருதுக்கான கூட்டம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் Al-Azhar-இன் எகிப்தின் இஸ்லாம் பெரிய தலைமைக் குரு Ahmed AI-Tayeb ஆகியோர் மனித உடன்பிறந்த உறவு குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 2019-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Zayed விருதின் 2024-ஆம் ஆண்டின் கூட்டத்திற்கான நடுவர் மன்றத்தின் பிரதிநிதிகளை டிசம்பர் 18, இத்திங்களன்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விருது வழங்கும் நடுவர்களின் ஒருவரும், அனைத்துலக மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவருமான ரபி ஆபிரகாம் கூப்பர் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொறுமையுள்ள மனிதர் என்றும், அவர் அமைதியை ஏற்படுத்தும் விருப்பத்துடன், மக்கள் அனைவரையும் நல்லது செய்ய ஊக்குவிக்கிறார் என்று பெருமிதத்துடன் கூறினார்.
இதுகுறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ள மற்றொரு நடுவரான Mohamed Abdelsalam அவர்கள், இவ்விருது மிகவும் உறுதியானதொரு காரியத்திற்கு உரியதாக இருக்கவேண்டுமெனவும், இது குறித்து அனைவரையும் அறிந்துகொள்ளச் செய்ய தாங்கள் முயன்று வருவதாகவும் உரைத்தார்.
மேலும் காலநிலை மாற்றம் குறித்து உரையாற்றிய அப்தெல்சலாம் அவர்கள், பருவநிலை மாற்றம் என்பது மனிதகுலத்திற்கு ஒரு சவாலாக உள்ளது என்றும், அதனால்தான் மனித உடன்பிறந்த உறவிற்கான உயர் குழு துபாயில் Cop28 உச்சி மாநாட்டிற்கு முன்பு, மதத் தலைவர்களின் கூட்டத்தை ஏற்பாடு செய்தது என்றும் எடுத்துக்காட்டினார்.
காலநிலை மாற்றம் என்பது, சகவாழ்வு மற்றும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கொள்கைகளுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது, ஏனெனில் காலநிலை மாற்றம் மக்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகிறது என்று எடுத்துக்காட்டியுள்ள அப்தெல்சலாம் அவர்கள், இந்தச் சுரண்டல் தொடர்ந்தால், எதிர்கால சந்ததியினருக்கான நல்லதொரு சூழலை நாம் விட்டுச்செல்ல முடியாது" என்று அவர் உரைத்தபோது, எகிப்தின் இஸ்லாம் பெரிய தலைமைக் குரு Ahmed AI-Tayeb அவர்களை மேற்கோள் காட்டினார்.
இறுதியாகத் தனது கருத்தை எடுத்துரைத்த கர்தினால் Leonardo Sandri அவர்கள், அபுதாபியில் திருத்தந்தை கையெழுத்திட்ட உடன்பிறந்த உறவு குறித்த இந்த ஆவணம் புரிதல் மற்றும் உரையாடலின் புதிய பாதையைத் திறந்தது என்று கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்