பத்திரிகையாளர்களுடன் கர்தினால் பரோலின் பத்திரிகையாளர்களுடன் கர்தினால் பரோலின்  (ANSA)

கிராமப்புற வாழ்வின் வருங்காலத்தை மனதில்கொண்டு செவிமடுங்கள்

விவசாயிகள் மற்றும் சிறுதொழில் செய்வோரின் குரல்களுக்கு செவிமடுப்பதோடு அவர்களோடு மனம்திறந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசுகள் தயாராக இருக்க வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

விவசாயிகளின் குரலுக்குச் செவிமடுக்கப்பட வேண்டும், அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இன்றியமையாதவை என்றார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் குறித்து இத்தாலியிலும் ஐரோப்பா முழுவதிலும் இடம்பெற்றுவரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த கர்தினால் பரோலின் அவர்கள், கிராமப்புற வாழ்வின் வருங்காலத்தை மனதில்கொண்டு, விவசாயிகள் மற்றும் சிறுதொழில் செய்வோரின் குரல்களுக்கு செவிமடுப்பதோடு அவர்களோடு மனம்திறந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அரசுகள் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மனிதனை அனைத்திற்கும் மையமாக நிறுத்தி தீர்வு காணவேண்டியது அவசியம் என்ற கர்தினால் பரோலின் அவர்கள், இதன் வழியாக அவனின் மாண்பு பாதுகாக்கப்படுவதோடு, நல்தீர்வுகள் காணப்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என உரைத்தார்.

மத்தியக்கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் குறித்தும் இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால், ஹமாஸ் புரட்சியாளர்களால் கடத்திவைக்கப்பட்டோர் விடுதலைச் செய்யப்படுவது குறித்த ஒப்பந்தங்களும், போர் நிறுத்தங்களும் மிகத் தூரமாகத் தெரிவதாக கவலையை வெளியிட்டார்.

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும், அவைகள் நல் நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்லுமா என்பதில் சந்தேகமாகவே உள்ளது என்ற கர்தினால், சந்தேகங்களின் மத்தியிலும், கடத்தி வைக்கப்படிருப்போர் விடுவிக்கப்படுவது குறித்தும் போர் நிறுத்தம் குறித்தும் நம்பிக்கை ஒளிகள் உள்ளன என்பதையும் தெரிவித்தார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 February 2024, 14:03