விசுவாசக்கோட்பாட்டு திருப்பீடத்துறை அலுவலகம் விசுவாசக்கோட்பாட்டு திருப்பீடத்துறை அலுவலகம் 

திருவருளைடயாளச் சடங்குமுறைகளில் எந்த ஒரு மாற்றமும் இல்லை

அன்பு, நம்பிக்கை, ஆராதனையுடன் கிறிஸ்து நமக்கு வழங்கிய திருவருளடையாளங்கள் சிறப்பிக்கப்படும்போது, அவரது வாழ்க்கை மற்றும் மறைப்பணியின் விலைமதிப்பற்ற செல்வத்தை நாம் பாதுகாக்கின்றோம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருவருளடையாளச் சடங்குகளின் செயல்முறைகள் மற்றும் செபங்களில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 3 சனிக்கிழமை வெளியிடப்பட்ட "Gestis verbisque" என்ற விசுவாசக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்துறை அறிக்கையானது அண்மையில் நடைபெற்ற கர்தினால்கள் மற்றும் ஆயர்கள் குழுவில் விவாதிக்கப்பட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுமதியுடன் வெளிவந்துள்ளது.

விசுவாசக்கோட்பாட்டு திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Victor Fernandez அவர்கள் அறிக்கையின் முதல் பகுதியில் கூறுகையில் திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதல் அருளடையாளங்களில் சொல்லப்படும் செபங்களின் வார்த்தைகள் மாற்றப்படக்கூடாது என்றும், தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்த மேய்ப்புப்பணியில் பல்வேறு நிலைகள் உள்ளன, திருவருளடையாளங்களில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கை கொண்ட மக்கள் திருஅவை விரும்பும் வகையில் அவரவர் திருவருளடையாளங்களைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்றும், அன்பு, நம்பிக்கை, ஆராதனையுடன் கிறிஸ்து நமக்கு வழங்கிய திருவருளடையாளங்கள் சிறப்பிக்கப்படும் போது, அவரது வாழ்க்கை மற்றும் மறைப்பணியின்  விலைமதிப்பற்ற செல்வத்தை நாம் பாதுகாக்கின்றோம் என்றும் அவ்வறிக்கை எடுத்துரைக்கின்றது.

அருளடையாளச்சடங்குகளில் சொல்லப்படும் செபங்கள் மற்றும் செயல்முறைகள் வழியாகக் கடவுள், ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மீட்பின் திட்டத்தை வெளிப்படுத்தவும், செயல்படுத்தவும் படைக்கப்பட்டார்கள் என்பதனை எடுத்துரைக்கின்றார் என்றும், இந்த மீட்பின் உறவானது திருவருளடையாள வழிபாடுகளினாலும் செயல்முறைகளினாலும் அதிகமாக உணரப்படுகின்றது என்றும் அவ்வறிக்கை எடுத்துரைக்கின்றது.

கடவுளின் செயலுக்கு முன்னுரிமை

திருஅவை கடவுளின் செயலுக்கு முன்னுரிமை அளிப்பதையும் கிறிஸ்துவின் உடலாகிய ஒற்றுமையைப் பாதுகாப்பதையும் தனது கடமையாகக் கொண்டுள்ளது, ஏனெனில் அவை கிறிஸ்துவின் அருள்பணித்துவ செயல்களால், புனிதப்பட்டுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடவுளின் அருளை நிர்வகிப்பதில் அல்ல, மாறாக உயிர்த்த இயேசு என்னும் கொடையை தூயஆவியின் கருவியாக செயல்பட்டு பிறருக்கு வழங்குவதில் திருஅவை விழிப்பாயிருக்கின்றது, அவரது ஆற்றல் திருவருளடையாளங்களுக்கான பொருளில் நிறைவடைகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளது அவ்வறிக்கை.

திருவருளடையாளச் சடங்கில் மனிதசெயல் வழியாக கிறிஸ்துவின் செயல் வெளிப்படுகின்றது என்றும், நீர், அப்பம், திராட்சை இரசம், எண்ணெய் போன்ற அருளடையாளப் பொருள்களும், சிலுவை அடையாளம் வரைதல், கைகளை வைத்தல், தண்ணீர் ஊற்றுதல், ஆசீர்வதித்தல் போன்றவைகளில் கிறிஸ்துவின் செயல் வெளிப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளது.  

திருவருளடையாளத்தில் பயன்படுத்தப்படும் இந்த புனித பொருள்களும் செயல்களும், ஆழ்நிலை அர்த்தத்தை அளித்து, அதன் சாதாரண மனித அர்த்தத்தையும் பொருளையும் முற்றிலும் மாற்றுகின்றது. எனவே திருவருளடையாளத்தில் பயன்படுத்தப்படும் பொருளும் வார்த்தையும், தனிநபர் அல்லது தனிப்பட்ட சமூகத்தின் விருப்பத்தை ஒருபோதும் சார்ந்து இருக்ககூடாது, சார்ந்திருக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 February 2024, 15:41