அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்ந்தோர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்ந்தோர் 

2024 உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தின மையக் கருத்து

பயணிக்கும் திருஅவையின் நவீனகால அடையாளமாக இருக்கும் புலம்பெயர்ந்த நம் சகோதர சகோதரிகளின் மீது சிறப்புக் கவனம் செலுத்துவோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இவ்வாண்டின் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கென “கடவுள் தன் மக்களோடு நடக்கிறார்” என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் உலக புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கான தலைப்பாக இவ்வாண்டு “கடவுள் தன் மக்களோடு நடக்கிறார்” என்பது எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஒருங்கிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை, இத்தினத்திற்கும் சிறிது நாட்களுக்கு முன்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இதற்கான செய்தியை வெளியிடுவார் என அறிவித்துள்ளது.

மோதல்களாலும் சித்ரவதைகளாலும், பொருளாதார காரணங்களாலும் புலம்பெயர்ந்துள்ள மக்களை கத்தோலிக்கர்கள் நினைவுகூர்ந்து அவர்களுக்காக செபிக்க வேண்டும் என 1914ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான உலக தினம் இவ்வாண்டு தன் 110வது தினத்தை செப்டம்பர் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பிக்கிறது.

பயணிக்கும் திருஅவையின் நவீனகால அடையாளமாக இருக்கும் புலம்பெயர்ந்த நம் சகோதர சகோதரிகளின் மீது சிறப்புக் கவனம் செலுத்துவதாக இந்த நாளுக்கான தயாரிப்புகளும் இந்த நாள் கொண்டாட்டங்களும் இருக்கும் என ஒருங்கிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை அறிவித்துள்ளது.

நம்முடைய உண்மையான தாயகத்தை அடைவதில் எதிர்கொள்ளும் அனைத்துத் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் வெற்றிகொள்வோம் என அழைப்பு விடுக்கும் இத்திருப்பீடத்துறை, நம் பயணத்தில் சிரமங்களை எதிர்கொள்ளும்போதெல்லாம் நமக்கு வழிகாட்டுதலையும் பாதுகாப்பையும் தரும் கடவுளின் உடனிருப்பை நாம் மறந்துவிடக்கூடாது, அதேவேளை நம் கதவுகளைத் தட்டும் குடிபெயர்ந்தோரிலும் இறை பிரசன்னத்தைக் கண்டுகொண்டு அவர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கவேண்டும் என மேலும் விண்ணப்பிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 February 2024, 14:35