UNRWA-வின் நிதி இடைநிறுத்தத்தால் பாலஸ்தீனியர்கள் பாதிப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நன்கொடையாளர்கள் பாலஸ்தீனத்திற்கான தங்கள் இடைநீக்க முடிவை மாற்றிக்கொள்ளவில்லையெனில் பிப்ரவரி மாத இறுதிக்குள், இருபது இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உயிர்காக்கும் உதவியை எங்களால் வழங்க முடியாது என்று கூறியுள்ளார் ஐரோப்பாவுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துயர்துடைப்புப்பணி (UNRWA ) அமைப்பின் இயக்குனர் திருமதி Marta Lorenzo.
வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றின்போது இவ்வாறு குறிப்பிட்ட திருமதி. Lorenzo அவர்கள், பல நன்கொடை நாடுகள், கிழக்கில் உள்ள பாலஸ்தீன புலம்பெயர்ந்தோருக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் வேலை முகமைக்கு நிதியுதவியை நிறுத்திய பின்னர், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் நிலைமையை மதிப்பீடு செய்து விளக்கியுள்ளார்.
காசாவில் உள்ள ஏறத்தாழ 22 இலட்ச பாலஸ்தீனியர்களுக்கு UNRWA எனப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துயர்துடைப்புப்பணி அமைப்பின் மனிதாபிமான உதவி மற்றும் கல்வி ஆதரவை இந்த நிதி இடைநிறுத்தம் விரைவில் பலவீனப்படுத்தும் என்றும், பிப்ரவரி மாத இறுதிக்குள் அதற்கான நிதி முடிந்துவிடும் என்றும் மதிப்பிட்டுள்ளார் திருமதி Lorenzo.
எங்கள் நிறுவல்களில் (installations) தஞ்சமடைந்திருக்கும் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்களைப் பற்றி நாங்கள் கவலைப்படுகிறோம் என்று உரைத்த திருமதி Lorenzo அவர்கள், காசாவில் மனிதாபிமான பதிலின் முதுகெலும்பாக நாங்கள் செயல்பட்டு வருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் முக்கியமாக, பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்றும், மோதல்கள் தீவிரமடைந்து வருவதால், பசியால் வாடும் பலர் ஆபத்தான சூழ்நிலைக்குள் தள்ளப்படுவதை நம்மால் காணமுடியும் என்றும் கூறிய திருமதி Lorenzo அவர்கள், இது ஒரு பெரிய தாக்கம் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
உணவு உதவி, தங்குமிடம், கல்வி, தண்ணீர், உடல்நலம் மற்றும் தூய்மை உட்பட பாலஸ்தீனம், லெபனான், ஜோர்டான் மற்றும் சிரியாவில் உள்ள இலட்சணக்கான பாலஸ்தீனியர்களுக்கு உயிர்காக்கும் சேவைகள் மற்றும் ஆதரவை UNRWA எனப்படும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் துயர்துடைப்புப்பணி அமைப்பு வழங்கி வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்