உக்ரைன் சிறார் உக்ரைன் சிறார்   (ANSA)

மனிதாபிமானமற்ற தன்மையை எடுத்துரைக்கும் போர்

அமைதி, ஈடுபாடு, பங்கேற்பு, இணக்கம், உரையாடல், என்ற வார்த்தைகள் கேள்விக்குறியுடன் பார்க்கப்படுகின்றன

மெரினா ராஜ் – வத்திக்கான்

போரின் கொடிய செயல்கள் மனிதாபிமானமற்றத் தன்மையை விவரிக்கின்றன என்றும், சில கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கைப்பற்ற, பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார் முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

பிப்ரவரி 24 சனிக்கிழமை உக்ரைன் போரின் இரண்டாமாண்டு நிறைவை முன்னிட்டு எது வரை? என்ற தலைப்பில் தனது கருத்துக்களை ஆசிரியர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் காயமடைந்துள்ளனர், உடல் ஊனமாக்கப்பட்டுள்ளனர், முழு உக்ரேனிய நகரங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன, இலட்சக் கணக்கான மக்கள் வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர், ஆயிரக்கணக்கான சுரங்கங்கள் அப்பாவி மக்களின் எதிர்கால வாழ்க்கையைக் குழிதோண்டிப் புதைத்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் முனைவர் தொர்னியெல்லி.

துன்புறும் உக்ரைன் மீது கவனத்தை செலுத்தும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுக்கும் எண்ணற்ற வேண்டுகோள்கள் போர்ச்சூழலை உருவாக்குபவர்களால் செவிமடுக்கப்படவில்லை என்றும், போரும் வன்முறையும் மட்டுமே பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் என மாறியது போல் தோற்றமளிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவருக்கான பள்ளி கட்டுதல்,  நலவாழ்வுப் பரமாரிப்பிற்கான நிதியளித்தல், உணவின்றி வாடும் மக்களுக்கு உணவளித்தல், இயற்கையைப் பாதுகாத்தல் போன்றவற்றிற்கு பணமளித்து  உதவாதவர்கள், ஆயுதங்களுக்கு அதிகமாகப் பணமளித்து உதவிவருகின்றனர் என்றும் கூறியுள்ளார் தொர்னியெல்லி.

அமைதி, ஈடுபாடு, பங்கேற்பு, இணக்கம், உரையாடல், என்ற வார்த்தைகள் கேள்விக்குறியுடன் பார்க்கப்படுகின்றன என்றும், அமைதி என்னும் பரிசிற்காகத் தொடர்ந்து இறைவனிடம் வேண்டவேண்டும், புதிய சுதந்திரமான, ஆக்கப்பூர்வமான தலைமைத்துவம், துணிவு, அமைதி, மனித குலத்தின் எதிர்காலம் ஆகியவை மிக அதிகமான தேவையில் உள்ளது என்றும் எடுத்துரைத்துள்ளார் முனைவர் தொர்னியெல்லி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2024, 14:51