குழந்தைப்பேறு தொடர்பில் தினமும் பெருமளவில் பெண்கள் உயிரிழப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
ஏழ்மையை அகற்றவும், பெண்கள் சரிநிகர் உரிமைகளைப் பெறவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு தன் பாராட்டுக்களையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளது திருப்பீடம்.
பெண்களின் சமுதாய நிலை குறித்த ஐ.நா. அவையின் 68வது கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, ஐ.நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் Gabriele Caccia அவர்கள், மனித உரிமைகளையும் அடிப்படை சுதந்திரத்தையும் மதிப்பதற்கான ஒப்பந்தங்களை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளபோதிலும், இன்னும் பெண்கள் சில நாடுகளில் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதாகவும், வன்முறைக்கும் உரிமை மீறல்களுக்கும் உள்ளாக்கப்படுவதுடன், பெண்கள் என்ற ஒரே காரணத்திற்காக, படிப்பதற்கும் வேலைசெய்வதற்கும் நல ஆதரவுப் பணிகளைப் பெறுவதற்குமான உரிமைகள் மறுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
உலகில் 10 பெண்களுக்கு ஒருவர் மிகவும் ஏழ்மை நிலையில் வாடுவதாகவும், இவர்களின் ஏழ்மையை அகற்றுவதற்கான பாதையில் நாம் வெற்றி காணவில்லை எனவும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் ஐ.நா.வுக்கான பிரதிநிதி பேராயர் காச்சா.
மிகவும் ஏழ்மை நிலையில் வாடும் பெண்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை நிவர்த்திச் செய்ய உழைக்கவே அனைத்து நேரத்தையும் செலவிடவேண்டியிருப்பதால் அவர்களின் திறமையை வெளிப்படுத்தவோ, வளர்த்துக்கொள்ளவோ போதிய நேரமும் வாய்ப்புகளும் கிடைப்பதில்லை எனவும் பேராயர் காச்சா ஐ.நா. கூட்டத்தில் தெரிவித்தார்.
பெண்களுக்கு போதிய தங்குமிட வசதிகளின்மை, போதிய உணவின்மை, போதிய பாதுகாப்பான சுகாதார வசதிகளின்மை போன்றவை இருப்பது, அவர்களின் தரமான கல்வியை பாதிப்பதால் அது மீண்டும் ஏழ்மைக்கே இட்டுச் செல்கிறது என்ற கவலையையும் வெளியிட்ட திருப்பீடப் பிரதிநிதி, சில நாடுகளில் இளம்பெண்கள் பாலியல் முறையில் தவறாக நடத்தப்படுவதும், இளவயதிலேயே திருமணம் செய்துவைப்பதும் தொடர்வதாகவும் கவலையை வெளியிட்டார்.
குழந்தைப்பேறின்போது பெண்களின் உயிரிழப்புக்கள் குறித்த கவலையையும் வெளியிட்ட பேராயர் காச்சா அவர்கள், உலகில் ஒவ்வொரு நாளும் கர்ப்பம் மற்றும் குழந்தைப்பேறு தொடர்புடையவைகளில் 800 பெண்கள் இக்காலத்திலும் உயிரிழந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார ஆதரவு மற்றும் சமூக ஆதரவு இன்மையால் பல பெண்கள் தங்கள் குழந்தையை கருவிலேயேக் கலைப்பதைத் தவிர வேறு வழி இல்லை என எண்ணுவதாகத் தெரிவித்த பேராயர் காச்சா அவர்கள், இன்றைய உலகில் பெண்கள் பாலியல் வன்முறைகள், சுரண்டல், எழ்மை, தனிமை, மற்றும் மனப்பதற்றம் போன்றவைகளுக்கு உள்ளாகிவருவதையும் தன் உரையில் எடுத்துரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்