ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பேராயர் Paul Richard Gallagher ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பேராயர் Paul Richard Gallagher 

ஜோர்டனில் 4 நாள் பயணம் மேற்கொண்டுவரும் பேராயர் காலகர்

வத்திக்கானுக்கும் ஜோர்டானுக்கும் இடையே முழு அரசியல் உறவு உருவாக்கப்பட்டதன் 30 ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி, ஜோர்டனில் திருப்பீட அதிகாரி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வத்திக்கானுக்கும் ஜோர்டன் நாட்டிற்கும் இடையே முழு அரசியல் உறவு உருவாக்கப்பட்டதன் 30 ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி, ஜோர்டனின் மன்னரையும், அப்பகுதி ஆயர்களையும், பிறரன்பு அமைப்புக்களையும் சந்தித்து உரையாடல் நடத்தும் நோக்கத்தில் 4 நாள் பயணத்தை அந்நாட்டில் மேற்கொண்டு வருகிறார் பேராயர் Paul Richard Gallagher.

நாடுகளுடன் உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் காலகர் அவர்கள் மார்ச் மாதம் 11 முதல் 14 வரை ஜோர்டனில் பயணம் மேற்கொண்டுவரும் வேளையில், மன்னர் இரண்டாம் அப்துல்லா அவர்களையும், துணைப்பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான Ayamen Saladi அவர்களையும், புனித பூமி ஆயர்களையும், காசா பகுதிக்கு பிறரன்பு உதவிகளை ஆற்றிவரும் Hashemite அமைப்பையும் சந்திப்பது பேராயரின் பயணத்திட்டத்தில் முக்கிய இடம் வகித்துள்ளது.

ஜோர்டன் தலைநகர் அம்மனில் உள்ள Sweifahவின் நாசரேத்தூர் அன்னை மரி கோவிலில் புனித பூமி ஆயர்கள் மற்றும் ஜோர்டன் கத்தோலிக்கர்களுடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றுவதும் அவரின் பயணத்திட்டத்தில் அடங்கியுள்ளது.

புனித பூமியிலுள்ள திருஅவை அதிகாரிகளைச் சந்திப்பது, ஈராக் மற்றும் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் Madaba நகர் காரித்தாஸ் மையத்தைச் சென்று பார்வையிடுவது, இயேசு திருமுழுக்குப்பெற்றப் பகுதியை தரிசிப்பது, சுற்றுலா மற்றும் தொன்மை இடங்களுக்கான அமைச்சர் Makram Mustafa Queisi அவர்களைச் சந்தித்து உரையாடுதல், பாலஸ்தினியர்களுக்கான ஐ.நா. நிவாரண அமைப்பின் தலைவர் Philippe Lazzarini அவர்களை ஜோர்டனில் சந்தித்தல் போன்றவையும் இந்த நான்கு நாள் பயணத் திட்டத்தில் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 March 2024, 13:46