மூன்றாவது ஆண்டு "கத்தோலிக்க – தாவோயிஸ்ட் பல்சமய உரையாடல்"
மெரினா ராஜ் - வத்திக்கான்
ஹாங்காங் கத்தோலிக்க மறைமாவட்டம், ஹாங்காங்கின் தாவோயிஸ்ட் அமைப்புடன் இணைந்து மூன்றாவது ஆண்டு கத்தோலிக்கர்கள் மற்றும் தாவோயிஸ்ட்களுக்கான பல்சமய உரையாடல் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 11 திங்கள்கிழமை முதல் 13 புதன்கிழமை வரை ஹாங்காங்கின் யுயென் நிறுவனத்தில் மூன்றாவது ஆண்டு கத்தோலிக்க – தாவோயிஸ்ட் பல்சமய உரையாடல் நடைபெற உள்ளதாகவும், இவ்வாண்டின் கருப்பொருளாக "பல்சமய உரையாடல் வழியாக நல்லிணக்கமுள்ள சமுதாயத்தை வளர்த்தெடுத்தல்" என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்கர்கள் மற்றும் தாவோயிஸ்ட் அமைப்பைச் சார்ந்த பல்வேறு அறிஞர்கள் மற்றும் கருத்துரையாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து, குறிப்பாக ஹாங்காங், சீனக்குடியரசு, பிரான்சு, இத்தாலி, தாய்வான், தென்கொரியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர் போன்ற பல பகுதிகளிலிருந்து கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்றும், நல்லிணக்க சமுதாயத்தை உருவாக்க கத்தோலிக்க மற்றும் தாவோயிஸ்ட் தரும் மத அடிப்படைகள், வழிபாடு மற்றும் ஆராதனை வழியாக நல்லிணக்கத்தை வளர்த்தல், தாவோயிஸ்ட் பாதை மற்றும் ஒழுக்கங்கள் உரையாடலிலும் பயிற்சியிலும், தாவோயிஸ்ட் மற்றும் கத்தோலிக்கத்தில் புனிதத்துவம், உலகளாவிய உலகில் சமய நம்பிக்கைகள் மற்றும் விழுமியங்களைப் பகிர்தல் என்பன போன்ற தலைப்புக்களில் பங்கேற்பாளர்கள் கலந்துரையாட இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
கிறிஸ்தவர்கள் மற்றும் தாவோயிஸ்டுகள் இருவரும் தங்களுக்கிடையே உள்ள பரஸ்பரப் புரிதலை ஆழப்படுத்துவதற்கும், ஒற்றுமையின்மை எவ்வாறு வலியையும் துன்பத்தையும் உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் இந்த பல்சமய உரையாடல் உதவுகின்றது என்றும் வலியுறுத்தியுள்ளது பல்சமய உரையாடலுக்கான திருப்பீடத்துறை.
மேலும், துண்டு துண்டாக பிளவுபட்டுள்ள நமது இன்றைய உலகை குணப்படுத்த ஒன்றாகச் செயல்படுவதற்கான ஒரு தளத்தை இந்த பல்சமய கலந்துரையாடல் வழங்கும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்