படைப்பை ஒரு கொடையாகக் கருதுவோம் - கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் – வத்திக்கான்
படைக்கப்பட்டவற்றின் அழகை அங்கீகரிப்பதன் வழியாக படைப்பிற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க முடியும் என்றும், படைப்பிற்கான நன்றியுணர்வு வழியாக மட்டுமே அதை ஒரு கொடையாகக் கருதி, நமக்குப் பின் வருபவர்களிடம் ஒப்படைக்க முடியும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் பியத்ரோ பரோலின்.
மார்ச் 22 வெள்ளிக்கிழமை விசென்ஷா போஸ்கோவில் உள்ள தூய ஜார்ஜ் பங்குத்தளத்தில் நடைபெற்ற படைப்பிற்கான திரைப்படத்தின் மூன்றாம் பதிப்பில் பங்கேற்றவர்களுக்கு அனுப்பியுள்ள காணொளிச்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.
அழகு மற்றும் அன்பினால் நம்மை வளர்ப்போம் - உலகை காக்கும் ஆற்றல் பெறுவோம் என்ற தலைப்பில் இவ்வாண்டு நடைபெறும் இக்கூட்டத்திற்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்த கர்தினால் பரோலின் அவர்கள், போர், மோதல்கள், சுய நலம், வேறுபாடு, பிறர் குரலுக்கு செவிகொடுக்க இயலாத தன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள இத்தகைய வரலாற்றுச் சூழலில் இத்தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகப் பொருத்தமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தும் ஒன்றிணைந்து செயல்படுதல் என்ற எளிய செயல் வழியாக சிறந்த வாய்ப்புக்களுக்காக நம் மனங்களைத் திறத்தல், ஒத்துழைத்தல், பரஸ்பர நட்புறவு கொள்ளுதல் போன்றவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.
இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்திருப்பது போல, நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தை சார்ந்தவர்கள் என்னும் விழிப்புணர்வு நிலைக்கு நம்மை இட்டுச்செல்கின்றது என்றும், இக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவரின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் மற்றவர்களின்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் பரோலின்.
ஒரே மனித குடும்பத்தில் எல்லைகளோ, அரசியல் சுவர்களோ இல்லை, அலட்சியப்படுத்தும் உலகமயமாக்கல், ஒதுக்கிவைக்கப்பட்ட பொருளாதாரம், திருத்தந்தையால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் தூக்கி எறியப்படும் கலாச்சாரம் ஆகியவற்றிற்கு இடமில்லை என்றும் குறுப்பிட்டுள்ளார் கர்தினால் பரோலின்.
பொதுவான இல்லம் என்பதில், நாம் பழகும் சூழலை மட்டும் நினைத்துப் பார்க்காமல், இந்த இல்லத்தில் வாழ்பவர்கள், வருங்காலத்தில் அங்கு வாழ இருப்பவர்கள் ஆகிய அனைவரையும் நினைத்துப் பார்ப்பது நல்லது என்றும், பொதுவான இல்லத்தின் கவனிப்பானது, நேரம் அல்லது இடம், அருகில் அல்லது தொலைவில் என நம் அயலார் முதல் படைப்பை நம்மிடம் ஒப்படைத்தக் கடவுள் வரை நீண்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நமது செயல்பாடுகளில் ஏற்படும் "பொறுப்பான மாற்றம்" "ஒருங்கிணைந்த சூழலியல் மாற்றத்தின்" வழியாக மட்டுமே நிகழ முடியும் என்றும், தவக்காலத்தின் கடைசி வாரம், உயிர்ப்பின் மறைபொருளில் நிறைவு செய்யப்பட இருக்கும் இப்புனித வாரமானது "மாற்றம்" என்ற அணுகுமுறை நம் வாழ்வில் இன்னும் குறிப்பிட்ட அர்த்தத்தைப் பெற அழைக்கின்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நமக்குக் கொடுக்கப்பட்ட கொடையை அங்கீகரிப்பதன் வழியாக மட்டுமே, அதை நாம் கவனித்துக்கொள்வது இயற்கையானது என்றும், இதனால் சமூகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தூக்கி எறியும் கலாச்சாரத்திலிருந்து" "கவனிப்பு கலாச்சாரத்திற்கு நாம் மாற முடியும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்