திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுத் துறை திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுத் துறை 

மனித மாண்பு குறித்த திருஅவைக் கோட்பாடு

திருஅவை விசுவாசக் கோட்பாட்டுத்துறையானது ஐந்தாண்டுகள் நீடித்த பணியின் விளைவாக மனித மாண்புக்கு எதிரான கொடிய வன்முறை குறித்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏப்ரல் 8 திங்கள் கிழமை திருஅவையின் விசுவாசக் கோட்பாட்டுத் துறையால் மனித மாண்பு குறித்த திருஅவைக் கோட்பாடானது திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுத் துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மானுவல் பெர்ணாண்டஸ், செயலர் பேரருள்திரு Armando Matteo, பேராசிரியர் Paola Scarcella அவர்களால் வெளியிடப்பட்டது.

முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி

போர் முதல் வறுமை வரை, புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறை முதல் பெண்களுக்கு எதிரான வன்முறை வரை, கருக்கலைப்பு முதல் வாடகை தாய் முறை மற்றும் கருணைக்கொலை வரை, பாலினக் கோட்பாடு முதல் டிஜிட்டல் வன்முறை வரை பல கருத்துக்களை உள்ளடக்கி மனித மாண்பு என்னும் திருஅவைக் கோட்பாட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

திருஅவையின் விசுவாசக் கோட்பாட்டுத்துறையின் ஐந்தாண்டுகள் நீடித்த பணியின் விளைவாக மனித மாண்புக்கு எதிரான கொடிய வன்முறை குறித்த  அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. கருவில் உள்ள குழந்தைகள், மற்றும் இறந்து கொண்டிருப்பவர்கள் உயிரைப் பாதுகாப்பத்தில் கவனம் செலுத்துபவர்கள், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் வாழ்வைக் காக்க கவனம் செலுத்துபவர்கள் ஆகிய இருவருக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை நீக்கிவதற்கும் இக்கோட்பாடு உதவுகின்றது.

திருஅவையானது திருவெளிப்பாட்டின் ஒளியில், கடவுளால் அவரது உருவில் படைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவால் மீட்கப்பட்ட மனிதனின் இருத்தலியல் மனிதமாண்பை மீண்டும் வலியுறுத்துகிறது மற்றும் உறுதிப்படுத்துகிறது என்றும்,  மனிதர்கள் ஒவ்வொருவரும் பகுத்தறியும் திறன் படைத்தவர் என்றும் அக்கோட்பாடு எடுத்துரைக்கின்றது.

பகுத்தறியும் திறனின் விளைவாக திருஅவையானது பிறக்காத குழந்தை, முதியவர், மனநலக் குறைபாடு உடையவர் உட்பட எல்லா மனிதரின் மாண்பையும் மதிக்கின்றது என்றும், மனித மாண்பு எல்லாச் சூழல்களுக்கும் அப்பாற்பட்டது என்ற உண்மையை வலியுறுத்துகின்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித மாண்பு குறித்த கருத்து சில நேரங்களில் புதிய உரிமைகளின் பெருக்கத்தை நியாப்படுத்த தவறாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று வலியுறுத்தி, வறுமை, போர் மற்றும் மனித வர்த்தகம் தொடர்பான கோட்பாடுகள் "மனித மாண்பின் சில கடுமையான மீறல்களின்" பட்டியலை முன்வைக்கிறது அக்கோட்பாடு.

வறுமை என்பது சமகால உலகின் மிகப்பெரிய அநீதி, போர் என்பது மனித மாண்பை மறுக்கும் செயல் மற்றும் மனித குலத்திற்கான தோல்வி என்றும், அக்கோட்பாட்டில் குறிப்பிட்டு, குடும்பத்தை உருவாக்கவோ, வேலை செய்யவோ உணவளிக்கவோ முடியாது தவிக்கும் புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

"மனித வர்த்தகமானது துன்பத்தின் பரிமாணங்களைப் பெறுகிறது, இத்தகைய இழிவான செயல்பாடு, நாகரீகமான சமூகம் என்று அழைக்கப்படும் நமது சமூகங்களின் அவமானமாக வரையறுக்கப்படுகிறது என்றும், மனித வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அதன் பயனாளர்கள் அனைவரும், ஆன்ம ஆய்வுக்குத் தங்கள் மனதினை செலுத்த அழைப்பு விடுக்கின்றது.

மேலும் மனித உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் வர்த்தகம், சிறார் பாலியல் வன்முறை, அடிமைத் தொழிலாளர்கள், விபச்சாரம், போதைப்பொருள், ஆயுதக் கடத்தல், வன்முறை போன்ற சர்வதேச குற்றங்களுக்கு எதிராக போராட அழைக்கப்படுகிறோம் என்பதை வலியுறுத்தியுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 April 2024, 14:26