கர்தினால் பரோலின் : போர்ச்சூழலை உருவாக்காதீர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
உக்ரைன் நாட்டிற்கு எதிரான இரஷ்யாவின் தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக உக்ரைனுக்கு மேற்கத்திய ஆயுதங்களை வழங்கி போரிடவைப்பது குறித்த முன்மொழிதல்கள், கட்டுப்படுத்த முடியாத ஒரு சூழலை உருவாக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.
இரஷ்ய நிலப்பகுதியில் மேற்கத்திய ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்கப்பட்டுவருவது கவலை தரும் ஒன்று என்பதால், இது குறித்து உலகின் மீது அக்கறையுடைய ஒவ்வொருவரும் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் கர்தினால்.
இத்தாலியின் மிலானில் இடம்பெற்ற ஒரு புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள், உக்ரைன் குழந்தைகளுக்கு உதவும் மனிதாபிமான அர்ப்பணத்தில் திருப்பீடம் எப்போதும் உறுதியாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்.
உக்ரைனிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட குழந்தைகள் அந்நாட்டிற்கே திரும்பி கொண்டுவரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, அதற்காக திருஅவை பல்வேறு வழிகளில் முயன்று வருவதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.
திருஅவை நம்பிக்கைக்குரியதாக தொடர்ந்து செயலாற்றி வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின், திருஅவை தொடர்ந்து உதவிகளை ஆற்றி வருகிறது என்பதையும், ஒரு கையில் வாங்குவதை மறு கையால் மக்கள் நலனுக்காக வழங்கிவிடுகிறது என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது என மேலும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்