ஆப்பிரிக்கா நம்பிக்கையின் நிலமாகத் திகழ்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஆப்பிரிக்கா தன்னிச்சையாக வெற்றிபெற வேண்டும் என்று நான் நம்புகிறேன். காரணம், அதற்கு வலிமை உள்ளது, வளங்கள் உள்ளன, எல்லா வகையான செல்வங்களும் உள்ளன, ஆனால், அமைதிக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைக்கும் அனைத்துலகச் சமூகத்தின் நேர்மையான நண்பர்களும் அதற்குத் தேவைப்படுகின்றனர் என்று கூறினார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மே 27, இத்திங்களன்று, உரோமையுள்ள புனித Mary Major பசிலிக்காவில் சிறப்பிக்கப்பட்ட 61-வது ஆப்ரிக்கத் தின சிறப்புத் திருப்பலிக்குத் தலைமையேற்று சிறப்பித்த திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருப்பலிக்குப் பிறகு வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய சிறியதொரு நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கொண்டாட்டம் சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் நான் ஆப்பிரிக்காவுடன் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன் என்று பெருமிதத்துடன் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்டுள்ளேன், அதனால் தலத்திருஅவை மற்றும் அதன் அரசுகளுடன் நான் தொடர்பில் இருக்கின்றேன் என்றும் உரைத்தார்.
வன்முறைகள் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் அம்மக்கள் மிகவும் துயருறுவதால் ஆப்பிரிக்காவிற்கு அனைத்துலகச் சமூகத்தின் ஆதரவு அதிகம் தேவைப்படுகிறது என்று சுட்டிக்காட்டினார் கர்தினால் பரோலின்.
ஆபிரிக்கத் தலத்திருஅவைக்குத் திருப்பீடம் உதவி வருகிறது, ஏனென்றால் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கின்றோம் என்று குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இக்கண்டத்திற்குத் திருத்தந்தை காட்டிவரும் நேரடி ஆர்வத்தின் வழியாக எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கரம்கொடுத்து உதவ முயற்சிப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் ஒவ்வொரு ஆண்டும், மே 25, அன்று உலக ஆபிரிக்கா தினத்தை கொண்டாடுகின்றனர், ஏனெனில் இந்த தேதியில் ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் (OAU) ஒப்பந்தங்கள் 1963-இல் கையெழுத்தானது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்