வத்திக்கான் நகரில் உடன்பிறந்த உறவு குறித்த 2-வது உலகக் கூட்டம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உடன்பிறந்த உறவு குறித்த இரண்டாவது உலகக் கூட்டம், 'மனிதனாக இரு' என்ற தலைப்பில், மே 10, 11 ஆகிய தேதிகளில் வத்திக்கான் நகரில் நடைபெறுகிறது என்றும், இது Fratelli Tutti (அனைவரும் சகோதரரே) என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
மே 7, இச்செவ்வாயன்று, இந்த அறிவிப்பை வழங்கிய திருப்பீடச் செய்தித் தொடர்பகம், 12 கருப்பொருளைகளைக் கொண்ட வட்டமேசை அமர்வுகள் நடைபெறும் என்றும், இதில் உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள் நமது சமகால உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் உடன்பிறந்த உறவு குறித்த உரையாடலில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளது.
மே 10, வெள்ளிக்கிழமை காலை, இக்கூட்டத்தை திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தொடங்கி வைப்பார் என்றும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண்கள், ஆண்கள் மற்றும் அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் இதில் பங்கேற்க உள்ளனர் என்றும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
அதனைத் தொடர்ந்து, இந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்பவர்களை மே 11, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்திலும், அதன்பின்னர் இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜியோ மத்தெரெல்லா அவர்கள், தனது அரசுத் தலைவர் மாளிகையிலும் சந்திப்பார்கள் என்றும் குறிப்பிடுகிறது திருப்பீடத்தின் செய்திக் குறிப்பு.
சனிக்கிழமை பிற்பகல் புதிய ஆயர்கள் மாமன்ற மண்டபத்தில், "குழந்தைகள்: எதிர்கால தலைமுறை" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த வட்டமேசை மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பங்கேற்கிறார் என்றும் திருப்பீட்ச் செய்தித் தொடர்பகத்தின் செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்