உர்பான் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கர்தினால் பரோலின் உர்பான் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கர்தினால் பரோலின்   (© Teresa Tseng Kuang Yi))

வாய்ப்புக்கான கதவுகள் திறக்கும்போது சீனாவுக்குச் செல்வார் திருத்தந்தை!

கர்தினால் பரோலின் : திருத்தந்தையின் இதயத்திற்கும், அவரோடு இணைந்து பணியாற்றும் எங்களின் இதயத்திற்கும் சீனா நெருக்கமாக உள்ளது.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

சீனாவுக்கான முதல் திருப்பீடப் பிரதிநிதி "கர்தினால்  செல்சோ கொஸ்தாந்தினியும் சீனாவும் - கிழக்கிற்கும் மேற்கிற்கும் இணைப்புப் பலமாக இருந்தவர்" என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திருபீடத்துறையின் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், சீனாவுடனான தொடர் உரையாடல் மற்றும் சீன மக்களின் மீது திருத்தந்தையின் உறவு குறித்து பகிர்ந்துகொண்டார்.

உர்பான் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்த வெளியீட்டு விழாவில், திருத்தந்தையின் சீன திருப்பயணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருப்பீடச் செயலர் அவர்கள், சீன மக்கள் மீதும் அதன் கலாச்சாரத்தின் மீதும் மிகுந்த பாராட்டையும் மதிப்பையும்  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எப்போதும் கொண்டிருப்பதாகவும், சீனப் பயணத்திற்கான சூழல்கள் உருவாகும்பட்சத்தில், திருத்தந்தை அவர்களும் விரைவில் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வார் என்றும், உயர்ந்த மற்றும் மேன்மையான ஆசிய நாடு ஒன்றுக்கு பயணம் மேற்கொள்வது திருத்தந்தையின்  விருப்பங்களில் ஒன்று என்றும் தெரிவித்தார்.

மேலும், புதனன்று நடைபெற்ற பொது மறைக்கல்வி உரையின் இறுதியில்  திருத்தந்தை அவர்கள், அதில் பங்கேற்ற ''கர்தினால் கோஸ்டான்டினியின் நண்பர்கள்' என்ற அமைப்புக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது, சீன மக்களுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்தையும், அழகான கலாச்சாரத்தைக் கொண்ட சீன மக்களுக்காக செபிப்பதாகவும், அவர்கள் எப்போதும் துணிவுள்ளவர்கள் என்று கூறியதையும் கர்தினால் பரோலின் நினைவு கூர்ந்தார்.

சீனாவின் கலாச்சாரம், மரபுகள், மற்றும் அவர்கள் தற்போது மேற்கொண்டு வரும் உறவுக்கான முயற்சிகளைப் பாராட்டிய திருப்பீடச் செயலர் அவர்கள், உண்மையில் சீனா, திருத்தந்தையின் இதயத்திற்கும், அவரோடு இணைந்து பணியாற்றும் எங்களின் இதயத்திற்கும் நெருக்கமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

சீனாவிற்கும் திருப்பீடத்திற்குமான ஓர் இணைப்புப் பாலமாக கர்தினால்  கொஸ்தாந்தினி அவர்கள் பணியாற்றியதை நினைவு கூர்ந்த கர்தினால் பரோலின் அவர்கள், கொஸ்தாந்தினி திருப்பீடத்தோடு கொண்டிருந்த  உறவு வழிமுறைகளை திருத்தந்தை அவர்களும் தொடர்ந்து  பின்பற்றுவதாகத் தெரிவித்தார்.

மேலும், நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு சீன கத்தோலிக்கர்களின் சார்பில்  அவர்களுடைய அருள்பணியாளர்களின் வழிகாட்டுதலில் தலமைத் திருஅவையுடன் நடைபெறும் உரையாடல்கள் சிறந்த பலனைத் தரும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2024, 15:53