மாநாட்டின் உரையாற்றும் பேராயர் காலகர் மாநாட்டின் உரையாற்றும் பேராயர் காலகர்  

மதச் சுதந்திரத்திற்கான புதிய உலகளாவிய தளத்திற்கான மாநாடு

மத-உணர்திறன் மற்றும் உள்ளடக்கிய கொள்கைகள் மற்றும் ஈடுபாடுகளை வளர்ப்பதற்கான புதுமையான கட்டமைப்புகள் மற்றும் உத்திகளை ஆராய்வதற்காக மதச் சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தும் உயர்மட்ட மாநாட்டை மால்டாவின் இறையாண்மை ஆணை ஊக்குவித்துள்ளது

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஜூன் 5, இப்புதனன்று, மால்டாவின் இறையாண்மை ஆணையால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மதச் சுதந்திரம் மற்றும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி: ஒரு புதிய உலகளாவிய தளம்'  என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில், திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் கலந்துகொண்டார்.

இதில் உரையாற்றியபோது, இரண்டாவது வத்திக்கான் திருச்சங்கத்தின் கத்தோலிக்க திருஅவையை மத சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு அர்ப்பணித்ததை நினைவு கூர்ந்த பேராயர் காலகர் அவர்கள், இதில் வெளியிடப்பட்ட Dignitatis Humanae ஆவணம் மத விடயங்களில் சமூக மற்றும் குடிமைச் சுதந்திரத்திற்கான நபர் மற்றும் சமூகங்களின் உரிமையை விளக்குகிறது என்றும் எடுத்துரைத்தார்.

கடவுளால் விரும்பப்பட்ட மற்றும் மனித இயல்பில் பொறிக்கப்பட்ட இந்தச் சுதந்திரம் பயன்படுத்தப்படுவதற்கு, அதன் வழியில் எந்தத் தடையும் வைக்கப்படக்கூடாது என்று மீண்டும் உறுதிப்படுத்திய பேராயர் காலகர் அவர்கள், அதவேளையில், மனித உரிமைகளுக்கும் மதச் சுதந்திரத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பையும் கருத்தில் கொண்டார்.

மேலும் மதச் சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவது ஓர் உரிமையை மட்டுமல்ல, முழு மனித உரிமைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார் பேராயர் காலகர்.

சில தரவுகளின்படி 490 கோடி மக்கள்  மதச் சுதந்திரம் மீறப்படும் நாடுகளில் வாழ்கின்றனர் என்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று சுட்டிக்காட்டிய பேராயர் காலகர் அவர்கள், உலகில் உள்ள ஒவ்வொரு பத்து குடிமக்களில் குறைந்தது ஏழு பேர் அவர்களின் மத உரிமைகளைப் பயன்படுத்துவதில் தடுக்கப்படுகின்றனர் என்றும் விளக்கினார்.

இத்துடன், 36 கோடியே 50 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள், ஏறக்குறைய 7 பேரில் ஒருவர், தங்கள் மத நம்பிக்கைக்காக அதிக அளவிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என்றும், தலத்திருஅவைகள் மற்றும் கிறிஸ்தவ சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் 2023-ஆம் ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளன என்றும் உரைத்துள்ள பேராயர் காலகர் அவர்கள், முன்பை விட தற்போது அதிகமான கிறிஸ்தவர்கள் வன்முறைத் தாக்குதல்கள் குறித்துப் புகார் அளித்துள்ளனர் என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2024, 15:10