கர்தினால்  Jean-Claude Hollerich கர்தினால் Jean-Claude Hollerich 

இரண்டாவது உலக ஆயர் மாமன்ற தாயாரிப்புக் கூட்ட முடிவு

ஒன்றிணைந்து நடைபோடுதல் குறித்த உலக ஆயர் மாமன்ற முயற்சிகளின் விதைகள் ஏற்கனவே முளைவிட்டு வருவதைக் காணமுடிகிறது என்கிறார் கர்தினால் Jean-Claude Hollerich.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஒன்றிணைந்து நடைபோடுதல் குறித்த உலக ஆயர் மாமன்றத்தின் முதல் கூட்டத்தொடரின் இறுதியில் உருவாக்கப்பட்ட அறிக்கைச் சுருக்கத்திற்கு இறைமக்களின் பதிலுரை குறித்து  உரோம் நகரில் இடம்பெற்ற இறையியலாளர் கூட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இவ்வாண்டில் இடம்பெற உள்ள இரண்டாவது உலக ஆயர் மாமன்ற தாயாரிப்புக் கூட்டத்திற்கு உதவும்வகையில் கடந்த ஒன்றரை வாரங்களாக 20 இறையியலாளர்கள் உரோம் நகரில் கூடி Instrumentum laboris  என்ற செயல்முறை தயாரிப்பு ஏட்டை, இறைமக்களின் பதிலுரைகளின் உதவியுடன் தயாரித்துள்ளனர்.

முதலாம் கூட்டத்தொடர் குறித்த அறிக்கைச் சுருக்கத்திற்கு இறைமக்கள் மிக ஆர்வத்துடனும், படைப்பாற்றல் திறனுடனும் தங்கள் பதில்மொழிகளை வழங்கியுள்ளதோடு, தங்கள் அக்கறையையும் எதிர்ப்பையும் கூட வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றார் உலக ஆயர் மாமன்றத்தின் பொது தொடர்பாளர் கர்தினால் Jean-Claude Hollerich.

 ஒன்றிணைந்து நடைபோடுதல் குறித்த உலக ஆயர் மாமன்ற முயற்சிகளின் விதைகள் ஏற்கனவே முளைவிட்டு வருவதைக் காணமுடிகிறது என்றார் கர்தினால்.

கடந்த ஒன்றரை வாரங்களாக உரோமில் இடம்பெற்ற இறையியலாளர் கூட்டத்தின்போது, உலகின் ஆயர் பேரவைகள், கீழை வழிபாட்டு முறை கிறிஸ்தவ சபைகள், துறவியர் அமைப்புக்கள், பங்குதள அருள்பணியாளர்கள் மற்றும் இறைமக்களின் கருத்துக்களைத் தாங்கிய 100க்கும் மேற்பட்ட அறிக்கைகள் விவாதிக்கப்பட்டன.  

முதல் கூட்டத் தொடரின் பதிலுரைகளை வைத்து இரண்டாம் கூட்டத் தொடருக்குத் தயாரித்த இந்த இறையியலாளர் கூட்டத்தில் ஐரோப்பாவிலிருந்து எட்டு பேர், ஆப்ரிக்காவிலிருந்து மூவர், வட அமெரிக்காவிலிருந்து இருவர், தென் அமெரிக்காவிலிருந்து மூவர், ஆஸ்திரேலியா உட்பட ஓசியானியாவிலிருந்து இருவர் ஆசியாவிலிருந்து இருவர், மற்றும் உலக ஆயர் மாமன்ற உயர் மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2024, 15:10