புலம்பெயர்ந்தோரின் பயணம் மிகவும் ஆபத்து நிறைந்தது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உலக புலம்பெர்ந்தோர் நாள் என்பது தங்களின் வாழ்விடங்களிருந்து வலுக்கட்டமையாக வேறிடங்களுக்கும் வேறு நாடுகளுக்கும் வெளியேற்றப்பட்ட மக்களைக் குறித்து சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது, ஏனென்றால், இத்தகைய சூழ்நிலைகளில் அவர்களால் வேறு எதையும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார் Danielle Vella
ஜூன் 20, இவ்வியாழனன்று, உலக புலம்பெயர்ந்தோர் நாளைச் சிறப்பிக்கும் வேளை, வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் இயேசு சபை புலம்பெயர்ந்தோர் பணியகத்தில் நல்லிணக்கம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு இயக்குநராகப் பணியாற்றும் Danielle Vella.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பைத் தேடி ஆபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றும், அவ்வாறே, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் இந்தப் பயணங்களின்போது மரணிக்கின்றனர் என்றும் கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் Vella.
துன்புறுத்தல், மோதல், வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களின் விளைவாக, மே 2024-ஆம் ஆண்டிற்குள், உலகளவில் 12 கோடிக்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரம் ஒன்றையும் இந்நேர்காணலில் எடுத்துக்காட்டியுள்ளார். Vella.
ஏன் நீங்கள் இடம்பெயர்ந்து செல்கிறீர்கள், உங்கள் பயணம் மிகவும் ஆபத்தானது என்று அம்மக்களிடம் கேட்டால், நாங்கள் சிறந்ததொரு வாழ்க்கைக்காக இடம்பெயர்ந்து செல்லவில்லை, மாறாக, வாழ்க்கையை எப்படியாவது வாழவேண்டும் என்பதற்காவே செல்கிறோம் என்று அவர்களில் ஒருவர் கூறிய பதில் என்னை மிகவும் பாதித்தது என்றும் உரைத்துள்ளார் Vella.
அமைதி மற்றும் பாதுகாப்பைத் தேடி தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள அனைவர்மேலும் நமது கவனத்தையும் சகோதரத்துவப் பார்வையையும் திருப்புவதற்கான ஒரு வாய்ப்பாக இவ்வாண்டு உலக புலம்பெயர்ந்தோர் நாள் அமையட்டும் என்று தனது புதன் மறைக்கல்வி உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதையும் இந்நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார் Vella.
2023-ஆம் ஆண்டில், 3,105 பேர் ஐரோப்பியக் கரையைக் கடக்க முயன்றபோது மத்தியதரைக் கடலில் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள Vella, இதில் அவர்களின் பங்கிற்கு நமது அரசுகளை பொறுப்பேற்க வைக்க நாம் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
"பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (காண்க மத் 7:12) என்ற இயேசு கூறும் பொன்விதியால் ஈர்க்கப்பட்டு வழிநடத்தப்படுவோம் என்றும் கூறியுள்ள Vella அவர்கள், நியாயமான மற்றும் இரக்கமுள்ள சமூகங்களைக் கட்டியெழுப்ப புலம்பெயர்ந்தோரின் நம்பிக்கையால் வழிநடத்தப்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்