கடவுள் மிகப் பெரியவர் – கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இனிமையான சூழல் இல்லாத போதும் உக்ரைனுக்கு தான் வந்திருப்பது ஒன்றிணைந்து மக்கள் அனைவரோடும் செபிப்பதற்காக என்றும், நமது நம்பிக்கைகள், முடிவு பெறுபவைகளாக, வரையறுக்கப்பட்ட நம்பிக்கைகளாக இருக்கின்றன, ஆனால் கடவுள் நம் ஒவ்வொருவரையும் விட மிகப்பெரியவர், நமது இதயங்கள் மற்றும் ஆற்றல்களை விடப் பெரியவர் என்றும் கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.
ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் பயணத்தின் நான்காம் நாளன்று, உக்ரைனின் Kyiv-Halych உயர்மறைமாவட்ட பேராயரும், கிரேக்கக் கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேராயர் Sviatoslav Shevchuk அவர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.
உக்ரைனில் எனது இருப்பு, மக்களுடனான திருத்தந்தையின் ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும், அமைதிக்கான பாதையில் தனது பங்களிப்பைக் கொடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.
உக்ரைன் பயணம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்று குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், நாளைய தினம் தான் அரசு அதிகாரிகளைச் சந்திக்க இருப்பதாகவும், மக்களின் அமைதிக்கான வாழ்க்கைமுறைக்கு தனது பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இறைவாக்கினர் எலியாவைப் போல நமது வாழ்வு இறைவாக்குரைக்கும் வாழ்வாக இருக்கவேண்டும் என்று மறையுரையில் தான் கூறிய கருத்துக்களை சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், கடவுளால் எல்லாம் இயலும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து வாழ உறுதியூட்டினார்.
துன்புறுத்தப்பட்ட உக்ரைன் மக்களுக்காக இடைவிடாது செபித்தும் உலக மக்களை செபிக்க அழைப்புவிடுத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் மக்களோடு தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றார் என்றும், எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்