திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்  (AFP or licensors)

உக்ரைனில் கர்தினால் பியத்ரோ பரோலின்

திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை பெர்டிகீவ் தூய மரியன்னை தேசிய திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

5 நாள் பயணமாக உக்ரைன் சென்றுள்ள திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் உக்ரைனின் கீவ், ஒடேசா பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் துறவறத்தலைவர்களை சந்திக்க உள்ளார்.

ஜூலை 19 வெள்ளிக்கிழமை மாலை உக்ரைன் சென்ற திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள், வரும் ஜூலை 24 புதன்கிழமை உரோம் திரும்ப உள்ளார்.

5 நாள்கள் கொண்ட இப்பயணத்தின் முதல் நாளான வெள்ளிக்கிழமை, இலத்தீன் வழிபாட்டுமுறை லிவிவ் பெருநகர உயர் மறைமாவட்டத்தில் உள்ள ஆயர் இல்லத்திற்கு வருகை தந்தார். ஒடேசா நகர்ப்புறப் பகுதியைச் சந்திக்கும் கர்தினால் பரோலின் அவர்கள், ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை பெர்டிகீவ் தூய மரியன்னை தேசிய திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்ற உள்ளார்.

கீவில் உள்ள கிரேக்க கத்தோலிக்க பேராலயத்திற்கு செல்ல உள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அவ்வுயர் மறைமாவட்ட பேராயர் Sviatoslav Shevchuk அவர்களையும் சந்திப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வருடம் தோறும் சிறப்பிக்கப்படும் இந்த மரியன்னை தேசிய திருத்தலத்தின் இறுதி நாள் திருவிழா கொண்டாட்டங்களின்போது எண்ணற்ற மக்கள் திருப்பயணிகளாக வந்து அன்னையிடம் தங்கள் வேண்டுதல்களை எடுத்துரைத்து செபிக்கின்றனர். போர் தொடங்கி இரண்டு ஆண்டிற்கும் மேலாக உக்ரைன் மக்கள் துன்புற்று வரும் நிலையில் இத்திருத்தலத்தை நோக்கி வரும் மக்கள் உலக அமைதிக்காக அன்னையிடம் சிறப்பாக செபிக்கின்றனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2024, 14:26