தூய மணல்பாறை அன்னை மரியா திருத்தலம் தூய மணல்பாறை அன்னை மரியா திருத்தலம்  

தூய மணல்பாறை அன்னை மரியா திருத்தலம் குறித்து திருப்பீடம்!

1968-ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி இத்தாலியின் கலாப்ரியாவில் கன்னி மரியா 18 வயது விவசாயியான கோசிமோ ஃப்ராகோமெனிக்கு காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருக்காட்சிகள் குறித்த புதிய விதிமுறைகளின் அடிப்படையில், இத்தாலியின் கலாப்ரியாவில் உள்ள கோசிமோ ஃபிராகோமெனிக்கு (Cosimo Fragomeni) அன்னை மரியா காட்சியளித்ததாகக் கூறப்படும் காட்சிகளிலிருந்து தொடர்ந்து வந்த ஆன்மிகப் பலன்கள் குறித்த நம்பிக்கை விதிகளை வெளியிட்டுள்ளது விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறை.

இது குறித்து தனது கடிதத்தில் கூறியுள்ள இத்துறையின் தலைவர் கர்தினால் விக்டர் மனுவேல் பெர்னாண்டஸ் அவர்கள், நாம் வாழும் மதச்சார்பற்ற உலகில், கடப்புநிலை  பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாமல் பலர் தங்கள் வாழ்க்கையை செலவிடுகிறார்கள் என்றும், தூய மணல்பாறை அன்னை கோவிலை அணுகிவரும் திருப்பயணிகள் யாவரும் நம்பிக்கையின் வலிமைவாய்ந்த அடையாளம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லோக்ரி-கெரேஸின் ஆயர் பிரான்செஸ்கோ ஒலிவாவின் கேள்விக்குப் பதிலளித்து ஜூன் 3 தேதியிட்டு எழுதியுள்ள கடிதத்தில், கலாப்ரியாவின் தூய மணல்பாறை அன்னை மரியா திருத்தலத்தைச் சுற்றி இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் தொடர்பாக முன்மொழியப்பட்ட தடையின்மை சான்றிதழை (Nihil obstat) உறுதிப்படுத்தியுள்ளார் கர்தினால் பெர்னாண்டஸ்.

1968ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி இங்குதான் கன்னி மரியா முதன்முறையாக 18 வயது விவசாயியான கோசிமோ ஃப்ராகோமெனிக்கு காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. அதே ஆண்டு மே 17 அன்று விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறை. வெளியிட்ட புதிய விதிமுறைகளின்படி, இக்காட்சி இயற்கைக்கு அப்பாற்பட்ட தன்மையின் ஒப்புதலாகப் புரிந்து கொள்ளப்படக்கூடாது, மாறாக, ஒரு திருத்தலத்திற்காக முன்மொழியப்பட்ட ஓர் ஆன்மிக அனுபவத்தின் அங்கீகாரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டதை கர்தினால் பெர்னாண்டஸ் தனது கடிதத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

ஆகவே, இந்தவிதத்தில் மறைமாவட்ட ஆயர் மேய்ப்புப் பணியின் மதிப்பைப் பாராட்டவும், திருப்பயணங்கள், ஆன்மிகக் கூட்டங்கள், இறைவேண்டல் கூட்டங்கள் போன்ற இந்த ஆன்மிக முன்மொழிவின் பரவலை வளர்ச்சியடைச் செய்யவும்  ஊக்குவிக்கப்படுகிறார் என்பதையும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் பெர்னாண்டஸ்.

மேலும், தனது கடிதத்தில், திருத்தலம் எவ்வாறு வெவ்வேறு பின்னணி கொண்ட விசுவாசிகளை ஈர்த்துள்ளது என்பதையும், குறிப்பாகத் துன்புறுவோரையும் நோயாளர்களையும் ஈர்த்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால்.

பல ஆண்டுகளாக, தகுதிவாய்ந்த சாதாரண மனிதரின் மேற்பார்வையின் கீழ் இந்த இடம் பக்திமிகுந்த திருப்பயணிகளின் வருகையை ஈர்த்துள்ளது என்றும்,  இது செபம் மற்றும் செவிசாய்த்தலின் தீவிர ஆன்மிக நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் கர்தினால் ஃபெர்னாண்டஸ்.

ஆயர் ஒலிவாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி தொடர்ந்து கூறியுள்ள கர்தினால் ஃபெர்னாண்டஸ் அவர்கள், தூய மணல்பாறை அன்னை திருத்தலத்திற்கு அடிக்கடி செல்லும் கிறிஸ்தவர்களின் வாழ்வில் செபங்கள், மனமாற்றங்கள், அருள்பணித்துவ மற்றும் துறவு வாழ்வுக்கான சில இறையழைத்தல்கள், பிறரன்புப் பணிகளுக்கான சான்றுகள், பக்தி முயற்சிகள், பிற ஆன்மிகப் பலன்கள் போன்றவை சான்றுகளாக அமைந்துள்ளதைத் தெளிவாகக் காணமுடிகிறது என்றும் கூறியுள்ளார் கர்தினால்.

விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறைக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பிய கடிதத்தில், ஆயர் ஒலிவா அவர்கள் இத்திருத்தலத்திற்கு வருபவர்கள், தாங்கள் கத்தோலிக்கத் திருஅவையுடன் ஒன்றித்திருப்பதை உணர்ந்து ஆறுதலையும் ஊக்கத்தையும் பெற்று தொடர்ந்து செயல்படுவதற்குத் தேவையான அங்கீகாரம் என்றத் ‘தடையின்மை சான்றிதழை’ (Nihil obstat) முன்மொழிந்த வேளை, இந்தப் பதிலை அவருக்கு வழங்கியுள்ளார் கர்தினால் ஃபெர்னாண்டஸ்.

இது சம்பந்தமாக, திருத்தலத்தில் நிகழும் ஆன்மிக நன்மை குறித்த ஆயரின் நேர்மறையான அறிக்கையை விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடத்துறை கவனத்தில் கொள்கிறது என்றும், திருப்பயணிகளைத் தவறாகக் கையாளுதல், தேவையற்ற நிதி ஆதாயம் அல்லது தீவிரமான கோட்பாட்டுப் பிழைகள் ஆகியவை விசுவாசிகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது திருஅவையின் நம்பகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்கள் என்றும், இவை நிகழா வண்ணம் ஆயர் தொடர்ந்து விழிப்புடன் செயல்படுகிறார் என்றும் பதிலளித்துள்ளார் கர்தினால் ஃபெர்னாண்டஸ்.

பொருத்தமற்ற வழிபாட்டு முறைகள் மற்றும் அன்னை மரியாவின் திருப்பெயர்களை (Marian titles) முறையற்ற வகையில் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் அன்னை மரியாவின் சரியான பக்தி முயற்சிகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் ஃபெர்னாண்டஸ்,  அன்னை மரியாவை ஒரு தெளிவான கிறிஸ்தியல் கண்ணோட்டத்தில் வழிபடுவது பொருத்தமானது என்றும், திருஅவையின் ஆசிரியம் கற்பிப்பது போல்,  'தாய் மதிக்கப்படும்போது, ​​மகன் இயேசு சரியாக அறியப்படுகிறார், அன்புகூரப்படுகிறார் மற்றும் மகிமைப்படுத்தப்படுகிறார்’ (Lumen gentium, 66) என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

இறை இரக்கத்தின் அடையாளமாக விளங்கும் அன்னை கன்னி மரியாவின் முன் கூடும் திருப்பயணிகளின் பிரசன்னம் என்பது, வாழ்க்கையின் உழைப்பு மற்றும் அவர்களின் தீவிர தேவைகளை நிறைவேற்றுவதற்கு அவர்களின் சொந்த இயலாமையை ஒப்புக்கொள்வதற்கான ஒரு வழியாகும் என்று தனது கடிதத்தில் இறுதியாக சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் ஃபெர்னாண்டஸ் அவர்கள், கடவுளின் விருப்பம்  அத்தகைய உண்மையான மதிப்புமிக்க நம்பிக்கையின் சூழலில், தொடக்க நம்பிக்கை அறிக்கையின் (kerygma) புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பு, ஆன்மாவின் இந்த அனுபவத்தை அறிவூட்டுவதற்கும் வளப்படுத்துவதற்கும் தொடர்ந்து உதவ முடியும் என்றும் கூறி தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2024, 14:32