புதிய சவால்களின் முன்னர் வளர்ச்சி திட்ட மறுமதிப்பீடு அவசியம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
அனைவருக்குமான அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய மனிதகுல வளர்ச்சி குறித்த அக்கறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, இதற்கான அனைத்து முயற்சிகளும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. கூட்டத்தில் அழைப்புவிடுத்தார் திருப்பீடப் பிரதிநிதி பேராயர் கபிரியேலே காச்சா.
செப்டம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் ‘வருங்காலத்தின் உச்சி மாநாடு' குறித்த ஐ.நா. கூட்டத்தில் கலந்துகொண்டு திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேராயர் காச்சா அவர்கள், நீடித்த உறுதியான வளர்ச்சி குறித்த முயற்சிகள் மறு அளவீடுச் செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நீடித்த நிலையான வளர்ச்சி குறித்த 2030ஆம் ஆண்டு குறிக்கோள் தொடர்புடைய வளர்ச்சிகள் எவ்விதம் சென்றுகொண்டிருக்கின்றன என்பது குறித்து மறு மதிப்பீடு செய்யவேண்டியதை வலியுறுத்திய ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி, பேராயர் காச்சா அவர்கள், புதிய சவால்களின் ஒளியில் இந்த மறு மதீப்பீடு மிக அத்தியாவசியமாகின்றது என எடுத்துரைத்தார்.
நீடித்த நிலையான வளர்ச்சி குறித்த உயர் மட்ட அரசியல் தலைவர்களின் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றிய பேராயர், அனைத்துலக சமுதாயத்தின் ஒன்றிணைந்த முயற்சிகளை வலியுறுத்தும் இத்தகைய ஐ.நா. கூட்டங்களின் நோக்கத்தைப் பாராட்டினார்.
மனித மாண்பை ஊக்குவித்தல், பொதுநலனை நாடல், இப்பூமிக்கோளத்தின் காப்பாளர்களாக செயல்படுதல் போன்றவை, நீடித்த நிலையான, அதேவேளை, நீதியும் அமைதியும் கொண்ட உலகைக் கட்டியெழுப்பும் பாதையில் கைக்கொள்ளப்பட வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார் பேராயர் காச்சா.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்