பேராயர் காச்சா பேராயர் காச்சா 

சர்வதேச சமுதாயம், சிறிய நாடுகளின் வளர்ச்சிக்குப் பொறுப்பேற்க...

ஏழை நாடுகளின் வளர்ச்சியில் தடைக்கற்களாக வெளிநாட்டுக் கடன், உணவு பாதுகாப்பின்மை, சத்துணவின்மை, கால நிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் உள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வளர்ச்சி கண்டுவரும் சிறிய தீவு நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில் அவைகளின் வெளிநாட்டுக் கடன் குறைப்பு மற்றும் கடன் ஒழிப்பு போன்ற முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என ஐ.நா. அவைக்கூட்டத்தில் அழைப்புவிடுத்தது திருப்பீடம்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் நகரில் இடம்பெற்ற சிறிய தீவு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுதல் என்ற ஐ.நா. அவைக்கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.விற்கான திருப்பீட பிரதிநிதி, பேராயர் கபிரியேலே காச்சா அவர்கள், பணக்கார நாடுகள் தங்கள் உறுதியான நடவடிக்கைகள் மற்றும் கூடிய ஒத்துழைப்பு வழியாக உதவ வேண்டும் என்றார்.

குடும்ப நாடுகள் என்ற வகையில் செயல்படும் சர்வதேச சமுதாயம், வளர்ந்துவரும் சிறிய நாடுகளின் வளர்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்ததோடு, ஏழை நாடுகளின் வளர்ச்சியில் தடைக்கற்களாக வெளிநாட்டுக் கடன், உணவு பாதுகாப்பின்மை, சத்துணவின்மை, கால நிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவை இருப்பதாகவும் தெரிவித்தார் பேராயர் காச்சா.  

2030ஆம் ஆண்டில் ஏழ்மையை அகற்றவேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படும் உலக நாடுகள், அந்த திட்டத்தில், ஏழை நாடுகள் பொருளாதாரத்தில் வளர பணக்கார நாடுகள் உதவ வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் உள்ளடக்க வேண்டும் என்ற அழைப்பையும் திருப்பீட பிரதிநிதி, பேராயர் காச்சா விடுத்தார்.

அனைத்து நாடுகளும் ஒரே நேரத்தில் முன்னேற உதவ வேண்டும் என்பது ஒரு வெறும் பரிந்துரையாக அல்ல, மாறாக ஓர் ஒழுக்க ரீதி சார்ந்த கட்டாயமாக நோக்கப்படவேண்டும் எனவும் ஐ.நா. அவைக்கூட்டத்தில் எடுத்துரைத்த பேராயர், ஏழை நாடுகளின் வளர்ச்சி தொடர்புடைய தேவைகளை நிறைவுச் செய்யவேண்டியது அனைத்துலக நாடுகளின் பொறுப்புணர்வாகிறது எனவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2024, 16:44