Supaya அன்னை மரியா திருத்தலத்தில் பேரயர் PEÑA PARRA Supaya அன்னை மரியா திருத்தலத்தில் பேரயர் PEÑA PARRA 

திருஅவையோடு உடன்பயணிப்பவர் அன்னை மரியா

நமது வாழ்க்கைப் பாதையைப் பாதுகாக்கவும், பாதைகளில் நாம் வழிதவறாமல் இருக்கவும், இருள் மற்றும் மரணத்தின் நிழல்கள் நம்மை அணுகாமல் இருக்கவும் அன்னை மரியா உதவுகின்றார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வானதூதரின் வார்த்தையைக் கேட்ட மரியா சற்றும் தாமதிக்காமல் விரைந்து சென்றார் என்றும், அன்னை மரியாவின் வழியானது திருஅவையின் வழி, திருஅவையோடு உடன்நடப்பவர் அவர் என்றும் கூறினார் பேராயர் எட்கர் பென்னா பாரா.

கடந்த வாரம் மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் பகுதியில் உள்ள சுயாபா அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு திருப்பீடச் செயலகத்தின் பொது விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலர் பேராயர் Edgar Peña Parra.

உலகெங்கிலும் பரந்து இருக்கும் அன்னை மரியாவின் திருத்தலங்களைப்போல சுயாபா அன்னை மரியா திருத்தலமும் சிறப்பு வாய்ந்தது என்று கூறிய பேராயர் அவர்கள், வாழ்க்கைப்பாதையின் குறுகலான வளைவுகள் என்னும் துன்பங்களினால் நாம் சோர்வடையும்போது காயம்பட்ட நம் இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கவும், பயணத்தில் ஏற்படும் துன்பங்களை நீக்கவும் அன்னை மரியா காத்திருக்கின்றார் என்று கூறினார்.

கடவுள் தனது எல்லையற்ற அன்பினால் அன்னை மரியா தனது திருத்தலத்தில் அவரை நாடிவரும் பிள்ளைகளை வரவேற்று விண்ணகப்பாதையை நோக்கிச்செல்ல உதவும்படிச் செய்துள்ளார் என்றும், அவர்களது நம்பிக்கைப் பயணத்தில் அவர்களோடு உடன் செல்கின்றார் என்றும் கூறினார் பேராயர் பாரா.  

நமது வாழ்க்கைப் பாதையைப் பாதுகாக்கவும், பாதைகளில் நாம் வழிதவறாமல் இருக்கவும், இருள் மற்றும் மரணத்தின் நிழல்கள் நம்மை அணுகாமல் இருக்கவும் அன்னை மரியா உதவுகின்றார் என்றும் கூறிய பேராயர் பாரா அவர்கள், அன்னை மரியா நம்பிக்கை வாழ்க்கைக்கு ஒரு முன்மாதிரிகை என்றும் கூறினார்.

போரின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியைப் பெற அன்னை மரியாவிடம் அருள்வேண்டுவோம் என்றும், வார்த்தையான இறைவனை நம் உள்ளத்தில், வரவேற்று வாழ்பவர்களாக நாம் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் பேராயர் பாரா.

வாழ்க்கைக்கு அர்த்தம் தரக்கூடியவர் கிறிஸ்து ஒருவரே என்று உலகம் முழுவதற்கும் சாட்சியமளிப்பவர்களாக வாழ வேண்டும் என்றும், நீதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியின் அடிப்படையில் உண்மையான சகோதரத்துவம் கொண்டு வாழ்பவர்களாக இருக்கவேண்டும் என்றும் கூறினார் பேராயர் பாரா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2024, 13:01