தாத்தா பாட்டியுடன் பேரக்குழந்தை தாத்தா பாட்டியுடன் பேரக்குழந்தை 

நான்காவது தாத்தா பாட்டிகள் தினம் வழங்கும் நிறைபேறு பலன்கள்

முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும் என்ற திருப்பாடல் வரிகளை தலைப்பாகக் கொண்டு சிறப்பிக்கப்பட உள்ளது திருஅவையின் நான்காவது தாத்தா பாட்டிகள் தினம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இம்மாதம் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தில் பங்கெடுப்போருக்கான நிறைபேறுபலன்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது Apostolic Penitentiary எனப்படும் திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை.

இயேசுவின் தாத்தா பாட்டிகளான சுவக்கீம் மற்றும் அன்னாவின் திருவிழாவைத் தொட்டுவரும் வகையில் ஜூலை மாதத்தின் நான்காம் ஞாயிறன்று சிறப்பிக்கப்படுவதாக தாத்தா பாட்டிகள் தினம் 2021ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் துவக்கப்பட்டிருக்க, இவ்வாண்டு அதன் நான்காம் உலக தினம் திருஅவையில் ஜூலை 28ஆம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

இந்நாளையொட்டிய நிறைபேறுபலன்கள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை, பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வுக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் Kevin Joseph Farrell அவர்களின் விண்ணப்பத்திற்கு ஏற்ப இந்த நிறைபேறுபலன்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கிறது.

முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும் (திபா 71:9) என்ற திருப்பாடல் வரிகளை தலைப்பாகக் கொண்டு சிறப்பிக்கப்படவுள்ள இந்த நான்காவது உலக தினத்தில், நோன்பு மற்றும் பிறரன்பை உள்ளடக்கிய உண்மை உணர்வினால் உந்தப்பட்டு இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் தாத்தா பாட்டிகள், முதியோர் மற்றும் பொதுநிலையினர் ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி மற்றும் திருத்தந்தையின் நோக்கங்களுக்காக செபித்தல் போன்றவைகளை நிறைவேற்றும்பட்சத்தில் நிறைபேறு பலன்களைப் பெறுவர் என அறிவிக்கிறது திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை.  

இந்த சிறப்பு நாளில் நோயாளிகள், தனிமையில் வாடுவோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை சென்று சந்தித்து உதவுவோருக்கும் இந்த பரிபூரண பலன் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நோயுற்ற முதியோர் மற்றும் பல்வேறு தீவிர காரணங்களால் வீட்டைவிட்டு வெளியேற முடியா நிலையில் இருப்போர் முதலானவர்கள், இக்கொண்டாட்டங்களில் ஆன்மீக முறையில் ஒன்றித்திருந்து தங்கள் துன்பதுயரங்களை இறைவனுக்கு ஒப்புவித்து செபிப்பதன் வழியாகவும் இந்த நிறைபேறுபலன்களைப் பெறலாம் எனவும் திருஅவையின் மனசாட்சி திருப்பீடத்துறை தன் அறிக்கையில் கூறியுள்ளது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2024, 16:00