நம்முடன் வாழ்பவர்கள் கடவுளின் கொடை என்பதை அறியும் திறன் வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மீட்பு என்பது ஆயுதங்களிலிருந்தோ வெற்றியிலிருந்தோ வருவதில்லை, மாறாக பிறரும் கடவுளின் கொடை மற்றும் திருவுளம் என்பதை நாம் அறியும்போதும், நமது வாழ்வின் ஒரு பகுதி அவர்கள் என்று அறியும் திறன் மற்றும் துணிவிலிருந்தும் மீட்பு பெறப்படுகின்றது என்றும் கூறினார் முதுபெரும்தந்தை பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.
ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை இத்தாலியின் பொம்பேய் தூய செபமாலை அன்னை திருத்தலத்தி திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.
கடவுளை அன்பு செய்தல் அயலாரை அன்பு செய்தல் என்னும் இரண்டு கட்டளைகளிலிருந்து மட்டுமே மற்ற அனைத்தையும் புரிந்துகொண்டு, விளக்கி வாழ முடியும் என்றும், இதவிட சிறந்த வேறு எந்த கட்டளைகளும் இல்லை அன்பு ஒன்று தான் முதன்மையான கட்டளை என்றும் கூறினார் முதுபெரும்தந்தை பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.
நம் உடன் வாழும் சகோதர சகோதரிகளை அன்பு செய்யாவிட்டால் கடவுளை நம்மால் அன்பு செய்ய முடியாது என்றும், இயேசு தந்தைக் கடவுளையும் மனிதனையும் அன்பு செய்து இக்கட்டளைகளை நிறைவேற்றி அன்பின் மறைபொருளாக விளங்கியவர் என்றும் கூறினார் முதுபெரும்தந்தை பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.
‘உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்ற இரண்டாவது கட்டளையானது சுயநலவாதிகளாக, நம்மை மட்டும் அன்பு செய்பவர்களாக இருக்கும் நம்மை பிறர்மீது அன்பு காட்டுபவர்களாக மாற வலியுறுத்துகின்றது என்று எடுத்துரைத்த முதுபெரும்தந்தை பிஸ்ஸபால்லா அவர்கள், நம் இதயத்தில் குடிகொண்டிருக்கும் அன்பை நம் உடன் வாழும் சகோதரசகோதரிகளை பார்க்கும் போது நினைவுகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
ஒருவர் மற்றவரை அன்பு செய்யும்போது நமக்குள் உள்ள தடைகள் உடையும், சுவர்கள் உடையும் என்றும் சுட்டிக்காட்டிய முதுபெரும்தந்தை அவர்கள், நம்மை நாம் அன்பு செய்யும் அதேவேளையில், பிறரையும் இரக்கம் மற்றும் பிறரன்புடன் பார்க்கும் மனப்பான்மைக்குள் வளர்கின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
புனித பூமியில் மதங்களுக்கிடையிலான உரையாடல் நெருக்கடியில் உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் முதுபெரும்தந்தை பிஸ்ஸபால்லா அவர்கள், நமக்கு பொதுவாக கடவுள் நம்பிக்கை இருந்தாலும், போர் மற்றும் கடுமையான நிறுவன நெருக்கடியின் நேரத்தில், நம் வாழ்க்கையில் கடவுள் நம்பிக்கையை மறுக்கிறோம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்