உக்ரைனுக்குத் தொடர்ந்து அனுப்பப்படும் உதவிப்பொருள்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வெயில் சுட்டெரிக்கும் இந்தக் கோடை காலத்தில் கூட, திருத்தந்தையின் தொண்டு முயற்சிகள் போரால் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனை நோக்கித் தொடர்கின்றன என்று கூறினார் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski.
முந்தைய மாதங்களைப் போலவே, உரோமையிலுள்ள உக்ரேனியப் பேராலயமான Holy Wisdom-லிருந்து ஆகஸ்ட் 7, இப்புதனன்று, உதவிப்பொருள்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனங்கள் புறப்படத் தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார் கர்தினால் Krajewski.
துயரத்தில் இருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் மக்களுக்குத் தேவையான உணவு, உடை, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இந்த வாகனங்கள் எடுத்துச் செல்கின்றன என்றும், அவ்வாறே கப்பலில் செல்லும் பொருள்களில், நீண்ட கால உணவுப் பொருளான டுனாவின் பெட்டிகளும் (boxes of tuna) அடங்கும் என்றும் தெரிவித்தார் கர்தினால்.
இந்தப் புதிய தொண்டு செயல் உக்ரைன் நாட்டுடனான திருத்தந்தையின் ஒன்றிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்பதும், ஒவ்வொரு வாரமும் இடம்பெறும் திருத்தந்தையின் பொது மறைக்கல்வி உரைக்குப் பின்பு அந்நாட்டிற்காக இறைவேண்டல் செய்யுமாறு அவர் அனைத்து விசுவாசிகளிடமும் விண்ணப்பிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்