எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா 

போர் நிறுத்தத்திற்கான எதிர்பார்ப்புகள் நம்பிக்கைக்குரியவை

வெறுப்பு, கோபம், அவமதிப்பு ஆகியவை எவ்வாறு வன்முறை வடிவங்களுக்கு வழிவகுத்தன என்பதற்கு தெளிவான, உறுதியான உதாரணம் தற்போது நடக்கும் மோதல்கள் - கர்தினால் பிஸ்ஸபால்லா

மெரினா ராஜ் - வத்திக்கான்

காசாவில் போர் நிறுத்தத்திற்கான எதிர்பார்ப்புகள் நம்பிக்கைக்குரியவை என்றும், கெய்ரோவில் இன்னும் சில நாட்களில் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார் முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.

அண்மையில் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த நேர்காணலின்போது இவ்வாறு கூறினார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.

பல்வேறு முனைகளில் வன்முறை நிறுத்தப்படவில்லை எனினும், காசாவின் வடக்கே அமைந்துள்ள சிறிய கத்தோலிக்க குழுமம், இந்த சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும் மிகவும் அமைதியான சூழ்நிலையில் வாழ முயற்சிக்கிறது என்றும், மால்டா மட்டுமன்று, பல சங்கங்களிடமிருந்தும் பெறக்கூடிய உதவிகளை மக்களுக்குக் கொடுத்து உதவுவதில் தீவீரமாகப் பணியாற்றி வருகின்றது என்றும் கூறினார் கர்தினால் பிஸ்ஸபால்லா.

மிகத் தீவிரமான மற்றும் சோகமான சூழ்நிலையிலும் கூட மக்களிடம் ஒற்றுமை இருக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறிய கர்தினால் பிஸ்ஸபால்லா அவர்கள், அனைத்து ஊடக கவனமும் காசா மற்றும் லெபனானின் எல்லையில் இருக்கும் போது, ​​மேற்குக் கரையின் நிலைமை ஒவ்வொரு நாளும் மிகவும் தீவிரமானதாகவும் ஆபத்தானதாகவும் மாறுகிறது என்றும் கூறினார்.

தொடர்ச்சியான பதட்டங்கள், பாலஸ்தீனிய மக்களின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்குகிறது கடினமாக்குகிறது என்று எடுத்துரைத்த கர்தினால் பிஸ்ஸபால்லா அவர்கள், காசாவில் போர்நிறுத்தத்திற்கான நிறைய வேலைகள் முதலில் செய்யப்பட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் இயல்பான வாழ்க்கையை முடிந்தவரை மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வெறுப்பு, கோபம், அவமதிப்பு ஆகியவை எவ்வாறு வன்முறை வடிவங்களுக்கு வழிவகுத்தன என்பதற்கு தெளிவான, உறுதியான உதாரணம் தற்போது நடக்கும் மோதல்கள் என்று எடுத்துரைத்த கர்தினால் பிஸ்ஸபால்லா அவர்கள், இந்த வன்முறையின் பின்னணி மதம் சார்ந்தது என்பதால், அரசியல் அளவில் மட்டுமல்லாது மத அளவிலும் நாம் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2024, 10:53