திருப்பீட சமூகத்தொடர்புத்துறையின் தலைவர் பவுலோ ரூபினி திருப்பீட சமூகத்தொடர்புத்துறையின் தலைவர் பவுலோ ரூபினி 

இதயத்தின் ஞானமே, மனிதாபிமான தகவல் தொடர்புக்கான திறவுகோல்

பவுலோ ரூபினி : உரையாடுதல், செவிமடுத்தல், மற்றவரை புரிந்துகொள்தல் என்பவை வழியாக, பிரிந்து கிடப்பவைகளை ஒன்றிணைப்பதே சமூகத்தொடர்பின் பணி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இன்றைய உலகில் சமூகத்தொடர்பு என்பது, இதய ஞானத்தின் அடிப்படையில் மனிதாபிமானத்தை மையம் கொண்டதாக அமையவேண்டுமேயொழிய, படிமுறைத் தீர்வுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக்கூடாது என உரைத்துள்ளார் சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பவுலோ ரூபினி.

பிரேசில் நாட்டின் Manaus என்ற இடத்தில் இடம்பெற்ற அமேசான் குறித்த அப்போஸ்தலிக்க மரபுவழி அவையின் இரண்டாவது கூட்டத்திற்கு திருப்பீட சமூகத்தொடர்புத்துறைத் தலைவர் அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளதுடன், முற்றிலும் மனிதாபிமான தகவல் தொடர்புக்கான பாதையைக் கண்டுகொள்வதற்கான திறவுகோல், இதயத்தின் ஞானமே எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு திருத்தந்தை வழங்கியுள்ள சமூகத்தொடர்பு தினத்திற்கான செய்தியை மையமாக வைத்து ரூபினி அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இந்த செய்தி, மக்கள் தங்கள் கலாச்சார பன்முகத்தன்மையை தக்கவைத்துக்கொள்ளும் அதேவேளையில், அவர்களிடையே ஒன்றிப்பை வளர்க்கும் பணியை சமூகத்தொடர்புத்துறை ஆற்றுகிறது என தெரிவித்துள்ளார்.

உரையாடுதல், செவிமடுத்தல், மற்றவரை புரிந்துகொள்தல் என்பவைகளின் வழியாக, பிரிந்து கிடப்பவைகளை ஒன்றிணைப்பதே சமூகத்தொடர்பின் பணி எனவும் அவர் எடுத்துரைத்தார்.

சிறப்பான உலகை கட்டியெழுப்புவதற்கு மனிதாபிமானமிக்க சமூகத்தொடர்புத்துறையின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்த திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர் ரூபினி அவர்கள், தீமைகளுக்குத் தலைவணங்காத, அதேவேளை மனிதாபிமானமிக்கதாக சமூகத்தொடர்புத்துறை இருக்க வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.

நம் சுயநலத்தின் காரணமாக பிரிந்துள்ளவைகளை, ஒன்றிப்பில் இணைத்துக் கொண்டுவர, நம் அனைவரின் பொறுப்புணர்வுடன்கூடிய ஆன்மீகக் கண்ணோட்டமும் தேவைப்படுகிறது என மேலும் தன் காணொளியில் கூறியுள்ளார் ரூபினி.

2019ஆம் ஆண்டு வத்திக்கானில் இடம்பெற்ற அமேசான் குறித்த உலக ஆயர் மன்றத்தின் தொடர்ச்சியாக தென் அமெரிக்க கண்டத்தின் அமேசான் பகுதி கருத்தரங்குகள் தலைத்திருஅவைகளால் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2024, 14:46