முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா. முதுபெரும் தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.  (REUTERS)

இருள் நிறைந்த இரவில் ஒளியின் பாதையைக் காட்டும் மரியா

மோதலுக்கான முடிவைக் கற்பனை செய்வது என்பது கடினமாகி வருகின்றது, அதனுடைய தாக்கம் முன்பை விட இப்போது மிக அதிகமாக இருப்பது வேதனையளிக்கின்றது. - முதுபெரும்தந்தை பிஸ்ஸபால்லா

மெரினா ராஜ் – வத்திக்கான்

இருள் நிறைந்த நீண்ட இரவாகிய நாம் வாழ்கின்ற இக்காலத்தில், அன்னை மரியா நம் ஒவ்வொருவருக்கும், அகில உலகிற்கும் ஒளியின் பாதையைத் திறந்துவிட அருள்வேண்டுவோம் என்றும், அதிகமாக உச்சரிக்கப்படும் வெறுப்பின் வார்த்தைகளுக்கு மத்தியில் நாம் ஒப்புரவு மற்றும் அமைதியின் வார்த்தைகளை நமது செபங்களாக அன்னை மரியிடம் கொண்டுசெல்வோம் என்றும் கூறியுள்ளார் முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.

ஆகஸ்ட் 15 திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழாவை முன்னிட்டு உலகில் அமைதி நிலவ வலியுறுத்தி எருசலேமின் இலத்தின் வழிபாட்டுமுறை மக்களுக்கு செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் எருசலேமின் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் பியர்பத்திஸ்தா பிஸ்ஸபால்லா.

பயங்கரமான போர் தொடங்கி பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், மோதலால் ஏற்படும் துன்பங்களும், என்ன நடக்கிறது என்ற திகைப்பும் குறையாமல் இருக்கின்றது என்றும், வெறுப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டு, வன்முறையைத் தீவிரமாக்கி தீர்வு காண்பதற்கான வாய்ப்பை உதறித் தள்ளுகிறது இப்போர்ச்சூழல் என்றும் குறிப்பிட்டுள்ளார் பிஸ்ஸபால்லா.

மோதலுக்கான முடிவைக் கற்பனை செய்வது என்பது கடினமாகி வருகின்றது என்றும், அதனுடைய தாக்கம் முன்பை விட இப்போது மிக அதிகமாக இருப்பது வேதனையளிக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள முதுபெரும்தந்தை பிஸ்ஸபால்லா அவர்கள், அமைதியான எதிர்காலம், அன்பான உறவுகள், உரையாடல்கள், அதற்கேற்ற மனிதர்கள் போன்றவற்றைக் காண்பது மிகவும் கடினமாகி வருகின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இத்தகைய கடினமான வன்முறையான சூழல், கோபம் போன்றவற்றால் நாம் நசுக்கப்பட்டவர்களாகத் தோன்றினாலும், ஆகஸ்ட் 15 கன்னி மரியா விண்ணகத்திற்கு எழுந்தருளிச்சென்ற நாளின் போது, அன்னை மரியா உலக அமைதிக்காக இறைவனிடம் பரிந்து பேச செபிக்கும்படி அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார் முதுபெரும்தந்தை பிஸ்ஸபால்லா.

விண்ணேற்பு அன்னையை நோக்கிச் செபம்.

மகிமை நிறைந்த அன்னையே, விண்ணக மகிமையைப் பாடும் வானதூதர்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டவரே,

அதிதூதரான மிக்கேல் மற்றும் விண்ணகத்தில் இருக்கக்கூடிய ஆற்றல் மிக்க அனைத்து வானதூதர்கள், புனிதர்கள் அனைவரோடும் சேர்ந்து,

இறைமகனும், தலைவரும், கடவுளுமான இயேசுவிடம் எங்களுக்காக மான்றாடும்.

புனித பூமி, அதிலுள்ள அனைத்து மக்கள் மற்றும் எல்லா மனிதகுலத்தையும் கண்ணோக்கிப் பார்த்து ஒப்புரவையும் அமைதியையும் கொடையாகக் கொடுத்தருளும்.

உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போர் சிதறடிக்கப்படட்டும்,

வலியோர் அரியணையினின்று தூக்கி எறியப்படட்டும்,

தாழ்நிலையில் இருப்போர் உயர்த்தப்படட்டும், பசித்தோர் நலன்களால் நிரப்பப்படட்டும்,

அமைதி ஏற்படுத்துவோர் கடவுளின் மக்கள் என அழைக்கப்படட்டும்,

கனிவுடையோர் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளட்டும்

என்கின்ற உமது இறைவாக்கு நிறைவேற்றப்படட்டும்.

இன்று உம்மை விண்ணகதூதர்களுக்கும் மேலாக உயர்த்தி விண்ணக மணிமகுடத்தால் முடிசூட்டி,

நிலையான மகிமையின் அரியணையில் உம்மை அமர்த்திய,

உமது மகனாகிய இயேசு கிறிஸ்துக்கு என்றென்றும் மகிமையும் மாட்சியும் உண்டாவதாக ஆமென்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2024, 11:08