Chandavila வியாகுல அன்னை திருத்தலம் Chandavila வியாகுல அன்னை திருத்தலம் 

இஸ்பெயினின் Chandavila மரியன்னை திருத்தலம், அருளின் இடம்

பல்வேறு அருள்வரங்களை வழங்கும் இடமாக இருக்கும் Chandavila வியாகுல அன்னை திருத்தலத்தில் பக்தி தொடர்பான விசுவாசிகளின் தொடர் செயல்பாடுகளுக்கு எவ்வித தடையுமில்லை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இஸ்பெயின் நாட்டின் Chandavila மரியன்னை திருத்தலம் உள்மன அமைதி, ஆறுதல் மற்றும் மனம் திரும்பலின் இடமாகத் தொடர்ந்து செயல்பட எவ்வித தடையுமில்லை என அறிவித்துள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

இரண்டாம் உலகப்போர் நிறைவுற்ற காலத்தில், அதாவது 1945ஆம் ஆண்டு, போர்த்துக்கல்லுடனான இஸ்பெயின் எல்லையின் Chandavila நகரில் இரு இளம்பெண்களுக்கு வியாகுல அன்னைமரியா தனித்தனியாகக் காட்சி வழங்கியதைத் தொடர்ந்து வியாகுல அன்னை மரியா திருத்தலமாக விளங்கி வருவது திருப்பீடத்தால் இறையருளின் இடமாக அங்கீகரிக்கப்படவேண்டும் என அண்மையில் அப்பகுதியின் Mérida-Badajoz  பேராயர் José Rodríguez Carballo கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.

ஏற்கனவே பல்வேறு அருள்வரங்களை வழங்கும் இடமாக இருக்கும் Chandavila வியாகுல அன்னை திருத்தலத்தில் பக்தி தொடர்பான விசுவாசிகளின் செயல்பாடுகளுக்கு எவ்வித தடையுமில்லை என இவ்வறிக்கையில் கூறும், விசுவாசக்கோட்பாட்டுத் துறையின் தலைவர் கர்தினால் Victor Manuel Fernández அவர்கள், எளிமை, குறைவான வார்த்தைகள், நிறைய பக்தி என ஒரு வளமான வரலாற்றைக் கொண்டிருக்கும் இம்மரியன்னை திருத்தலம் அதே பாதையில் மக்களுக்கு அருளை வழங்கும் இடமாக இருக்க எவ்வித தடையுமில்லை என தெரிவிக்கிறது.

Marcelina Barroso Expósito என்ற 10 வயது சிறுமியும், Afra Brígido Blanco என்ற 17 வயது இளம்பெண்ணும் 1945ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து வியாகுல அன்னை மரியாவை காட்சியில் தனித்தனியாகக் கண்டனர்.

பத்து வயது சிறுமிக்கு நேரடியாகத் தோன்றி நெற்றியில் முத்தத்தை வழங்கிய அன்னை மரியா,  அதே இடத்தில் பின்னர் 17 வயது Blancoவுக்கும்  தோன்றினார்.

இந்த காட்சிகள் குறித்த நிச்சயமான உறுதிப்பாடுகள் இல்லையெனினும், இவ்விடம் தூய ஆவியாரின் செயல்பாடுகளின் இடமாக பல்வேறு அடையாளங்கள் வழி நிரூபிக்கப்பட்டுள்ளதாக திருப்பீடத் துறையின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

வியாகுல அன்னை மரியாவை காட்சியில் கண்ட இவ்விரு இளம்பெண்களும் அதன்பின் தங்கள் வாழ்வை நோயுற்றோர், முதியோர், கைவிடப்பட்டோர் என அனைவருக்கும், தாங்கள் அன்னை மரியாவிடம் இருந்து பெற்ற அன்பை பிறரன்புச் செயல்கள் வழி பகிர்ந்து வந்தனர்.

அன்னை மரியா இரு இளம்பெண்களுக்கு காட்சி அளித்ததன் 75ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களையொட்டி Mérida-Badajoz உயர்மறைமாவட்டம் 2020ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாகக் கொண்டாடியதையும், விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் அறிக்கையில் நினைவுகூரப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2024, 14:44