மிக நீண்ட, மறக்க முடியாத திருத்தூதுப் பயணம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஆசியா மற்றும் ஓசியானியாவிற்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மிக நீண்ட திருத்தூதுப்பயணமானது மனதிலும் நினைவிலும் நிலைத்திருக்கக்கூடியது என்றும், உலகத்தின் முனைகளில் இருக்கும் மறைப்பணியாளர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்த மறக்க முடியாத பயணமாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.
செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 45ஆவது திருத்தூதுப்பயண நிறைவையொட்டி தனது கருத்துக்களை காணொளிப் பதிவின் வாயிலாக தெரிவித்துள்ளார் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி
10 நாள்களைக் கொண்ட இந்த திருத்தூதுப்பயணத்தில் இடம்பெற்ற 7 முக்கியமான நிகழ்வுகளான நட்பின் சுரங்கப்பாதை, வனிமோ மறைமாவட்ட மக்கள் மற்றும் மறைப்பணியாளர்கள் சந்திப்பு, கிழக்கு திமோர் அரசுத்தலைவர் சந்திப்பு, இர்மாஸ் அல்மா மாற்றுத்திறனாளர் குழந்தைகள் சந்திப்பு, கிழக்கு திமோரில் நடைபெற்ற திருப்பலி, சிங்கப்பூர் மக்கள், இறுதியாக திருத்தந்தை பிரான்சிஸ் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார் முனைவர் அந்திரேயா.
முதலாவது,
ஜகார்த்தாவில் Istiqlal மசூதி மற்றும் அன்னை மரியா பேராலயத்தைச் சென்றடைய அமைக்கப்பட்டிருக்கும் அடிநிலப்பாதையான, “நட்புறவின் சுரங்கப்பாதை” திறந்து வைக்கப்பட்ட நிகழ்வு.
போர், வன்முறை, தீவிரவாதம், இறப்பு, போன்றவை நிகழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் நம்பிக்கையின் விதையாக இந்நிகழ்வு சான்றளிக்கின்றது. உரோம் ஆயர், மற்றும் இமாம் இடையிலான நட்புறவு மற்றும் அன்புறவின் வெளிப்பாடுகள் பலரது உள்ளத்தை தொட்டன.
இரண்டாவது,
பாப்புவா நியு கினியின் வடமேற்குப் பகுதியில் உள்ள வனிமோவிற்கு ஆஸ்திரேலிய இராணுவ விமானத்தில் உதவிப்பொருள்களுடன் பயணித்து அர்ஜெண்டினா மறைப்பணியாளர்களையும் அங்குள்ள மக்களையும் சந்தித்தது.
மறைப்பணியாளர் என்பது வாழ்க்கையை, பிரச்சனைகளை, நம்பிக்கையைப் பகிர்வது. கடவுளின் மென்மை மற்றும் இரக்கத்திற்கு சான்று பகரும் அடையாளமாக இருப்பது.
மூன்றாவது,
கிழக்கு திமோரில் உள்ள திலியில் அரசுத்தலைவர் ஜோச் மானுவம் உடனான சந்திப்பின் போது திருத்தந்தையின் சக்கர நாற்காலியின் கீழ்ப்பகுதியை அரசுத்தலைவர் கீழே குனிந்து சரிசெய்தது.
அதிகமான கத்தோலிக்கர்களைக் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், நம்பிக்கை என்பது அடிப்படையான அடையாளமாகவும், திருஅவையின் பங்கு இந்தோனேசியாவின் வளர்ச்சிக்கான சுதந்திர செயல்பாடுகளில் வெளிப்படுகின்றது என்பதை எடுத்துரைக்கின்றது.
நான்காவது,
அருள்சகோதரிகளால் நடத்தப்படும் இர்மாஸ் அல்மா பள்ளியில் உள்ள மாற்றுத்திறனாளர் குழந்தைகளை திருத்தந்தை அவர்கள் சந்தித்தபோது வெளிப்படுத்திய செய்கைகள் மற்றும் வார்த்தைகள்.
கடவுளே நம்மை காத்துக்கொள்ளட்டும் என்ற நற்செய்தி வார்த்தைகளை ஆழமாக எடுத்துரைத்தது. நாங்கள் ஏன் துன்புறுகின்றோம் என்ற குழந்தைகளின் கேள்வி ஆறாத காயமாக இருந்தாலும் தனது அரவணைப்பு மற்றும் நெருக்கத்தால் அவர்களுக்கு திருத்தந்தை பதிலளித்ததும் மறக்க முடியாதது.
ஐந்தாவது,
கிழக்கு திமோரில் நடைபெற்ற திருப்பலியின்போது 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருத்தந்தையின் வருகைக்காக பல மணி நேரங்கள் கடுமையான வெயிலில் காத்திருந்தனர்.
மொத்த மக்கள்தொகையில் அறுபத்தைந்து விழுக்காடு பேர் 30 வயதுக்குட்பட்ட மக்கள். திருத்தந்தையின் வாகனம் பயணித்த தெருக்கள் மற்றும் சாலைகளில் ஆண், பெண், இளையோர், குழந்தைகள் என காத்திருந்தது திருஅவை மற்றும் உலகிற்கான நம்பிக்கையாக காட்சியளித்தது.
ஆறாவது,
மிக நவீன வானளாவிய கட்டிடங்கள் கொண்ட தீவு-மாநிலமான சிங்கப்பூர். வளர்ந்த மற்றும் பணக்கார நாடானது இதற்கு முன் சந்தித்த தூசி நிறைந்த திலி நகரத்தை முற்றிலும் வேறுபடுத்தியது.
நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும், செழிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை, மிக வேகமான போக்குவரத்து போன்றவற்றைக் கொண்ட மக்கள் அனைவரையும் அரவணைத்து அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் வழியை திருத்தந்தை இங்கு வெளிப்படுத்தினார்.
இறுதியாக,
மிக நீண்ட இந்த திருத்தூதுப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏறக்குறைய 88 வயதை நெருங்கிகொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த நீண்ட பயணத்தை எப்படி தாங்கிக்கொள்ளப் போகிறார் என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தாலும் சோர்வடைவதற்கு பதிலாக மிகுந்த ஆற்றலைப் பெற்றார். அவர் மிகுந்த ஆற்றலைப் பெற்றவராக இந்த திருத்தூதுப்பயணத்தில் இருந்தார் என்பதற்கு சான்று, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரைகளை விட்டுவிட்டு தானாக அவர்களுக்கு உரை வழங்கியது.
இவ்வாறாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 45ஆவது திருத்துதுப்பயணம் குறித்த தனது கருத்துக்களை 7 நிலைகளில் வெளிப்படுத்தியுள்ளார் முனைவர் அந்திரேயா தொர்னியெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்